இந்தியா

1993 மும்பை குண்டுவெடிப்பு - தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளி அபுபக்கர் கைது

Veeramani

தாவூத் இப்ராஹிமின் நெருங்கியக் கூட்டாளியும், 1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பின் முக்கிய குற்றவாளியுமான அபு பக்கர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 29 வருட தேடுதலுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவில் மிகவும் தேடப்படும் பயங்கரவாதிகளில் ஒருவரான அபு பக்கரை நாடு கடத்துவதற்கான செயல்முறை தொடங்கப்பட்டுள்ளது. 1993 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த குண்டுவெடிப்பின் முக்கிய சதிகாரர்களில் ஒருவரான அபு பக்கர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பாகிஸ்தானில் வசித்து வந்தார், அவருக்கு எதிராக 1997 ஆம் ஆண்டு 'ரெட் கார்னர் நோட்டீஸ்' வெளியிடப்பட்டது.

தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளிகளான முகமது மற்றும் முஸ்தபா தோசா ஆகியோருடன் இணைந்து வளைகுடா நாடுகளில் இருந்து மும்பைக்கு தங்கம், ஆடைகள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை கடத்தும் செயலில் ஈடுபட்டவர் அபு பக்கர் அப்துல் கஃபர் ஷேக். 

1993 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் தேதி மும்பையில் நடந்த 12 பயங்கரவாத தொடர் குண்டுவெடிப்புகளில் 257 பேர் உயிரிழந்தனர், 1,400 பேர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பை தாவூத் இப்ராஹிம் தனது நெருங்கிய கூட்டாளிகளான டைகர் மேமன் மற்றும் யாகூப் மேமன் ஆகியோரின் உதவியுடன் திட்டமிட்டு செயல்படுத்தினார்.

2013 ஆம் ஆண்டு மார்ச் 21 அன்று, உச்ச நீதிமன்றம் யாகூப் மேமனுக்கு எதிரான மரண தண்டனையை உறுதிசெய்தது, 2015 ஆம் ஆண்டு ஜூலை 30 ஆம் தேதி அன்று, மகாராஷ்டிர அரசு யாகூப்பை நாக்பூர் மத்திய சிறையில் தூக்கிலிட்டது. இருப்பினும், மும்பை குண்டுவெடிப்பின் முக்கிய குற்றவாளிகளான தாவூத் இப்ராகிம் மற்றும் டைகர் மேமன் ஆகிய இருவர் இதுவரை கைது செய்யப்படவில்லை.