இந்தியா

குஜராத்: படேல் சிலை அருகேயுள்ள ஏரியில் 194 முதலைகள் அகற்றம்

JustinDurai
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்காக படேல் சிலை அருகே உள்ள ஏரியில் இருந்து இதுவரை 194 முதலைகள் அகற்றப்பட்டுள்ளன. 
குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் சர்தார் வல்லபாய் படேலுக்கு 182 மீட்டர் உயரத்தில் பிரம்மாண்ட சிலை அமைக்கப்பட்டு உள்ளது. ஒற்றுமையின் சிலை என அழைக்கப்படும் இந்த சிலை அமைந்துள்ள பகுதி மிகப்பெரிய சுற்றுலா தலமாக மேம்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சிலையை பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகள், சிலைக்கு அருகே உள்ள பஞ்ச்முலி ஏரியில் படகு சவாரியும் சென்று வருகிறார்கள். ஆனால் இந்த ஏரியில் நூற்றுக்கணக்கான முதலைகள் வசிப்பதால் சுற்றுலா பயணிகள் அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. 
இதையடுத்து, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த ஏரியில் உள்ள முதலைகளை அகற்றி சர்தார் சரோவர் அணையிலும், பாதுகாப்பு மையங்களிலும் இடமாற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி, இதுவரை 194 முதலைகள் இந்த ஏரியில் இருந்து அகற்றப்பட்டிருப்பதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.