கையில் ஒரு பட்டயப் படிப்பு கூட இல்லாமல், உலகின் மிக உயரிய கார் நிறுவனமான BMW-வில் ஒருவரால் வேலை பெற முடியுமா என்ற கேள்விக்கு விடையாக மாறியிருக்கிறார் 19 வயதான இந்திய இளம்பெண் கௌரி எம் (Gauri M). பலரும் லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து டிகிரி முடித்துவிட்டு வேலைக்காகக் காத்திருக்கும் நிலையில், எவ்வித விண்ணப்பமும் இன்றி நிறுவனமே தேடி வந்து இவருக்கு வேலை வழங்கியிருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
செய்தியாளர் - இனியா
புனேவைச் சேர்ந்த கௌரி, தற்போது BA Communication இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது பட்டப்படிப்பை 2027-ஆம் ஆண்டு தான் முடிக்க உள்ளார். இந்நிலையில், முறையான பட்டப்படிப்பு இல்லாத போதிலும், பிஎம்டபிள்யூ நிறுவனத்தில் Marketing பிரிவில் ஒரு முழுநேரப் பணியைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளார். பொதுவாக இது போன்ற பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில், ஒரு மார்க்கெட்டிங் வேலைக்கு விண்ணப்பிக்க ஐந்து ஆண்டுகள் பணி அனுபவம் அல்லது MBA பட்டம் கட்டாயம் என்று வேலை விவரக் குறிப்பில் கேட்கப்படும்.
ஆனால், கௌரியின் விஷயத்தில் அவர் எந்தவிதமான விண்ணப்பமும் செய்யவில்லை அல்லது வேலை கேட்டு மின்னஞ்சலும் அனுப்பவில்லை. கௌரி சமூக வலைதளங்களில் உருவாக்கி வைத்துள்ள 'Personal Branding' மற்றும் அவரது திறமையைப் பார்த்துவிட்டு நிறுவனமே அவரைத் தேடி வந்து இந்த வாய்ப்பை வழங்கியுள்ளது.
LinkedIn தளத்தில் சுமார் 85,000 பின்தொடர்பாளர்களையும், இன்ஸ்டாகிராமில் 35,000-க்கும் மேற்பட்ட பின்தொடர்பாளர்களையும் கொண்டுள்ள கௌரி, தான் உருவாக்கும் ஆன்லைன் உள்ளடக்கங்கள் மூலமாகவே தனது திறமையை நிரூபித்துள்ளார். ஏற்கனவே Tata Motors போன்ற இந்தியாவின் மிகப்பெரிய வணிக வாகனத் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றிய அனுபவமும் இவருக்கு உள்ளது.
இது குறித்துப் பதிவிட்டுள்ள கௌரி, ஒரே வாரத்தில் தனக்கு மூன்று பெரிய நிறுவனங்களில் இருந்து வேலை வாய்ப்புகள் வந்ததாகவும், தனது டிஜிட்டல் இருப்பு தான் தனக்கான தகுதியாக மாறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து இணையத்தில் ஆருஷி (Arushi) மற்றும் ரோஹித் ராஜ் (Rohit Raj) போன்றோர் பதிவிட்ட கருத்துகள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. "டிகிரி அல்லது நீண்ட கால அனுபவத்தை விடவும் மேலான ஒரு சொத்து கௌரியிடம் உள்ளது, அதுதான் அவரது திறமை" என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அதே சமயம், மற்றொரு தரப்பினர் இது போன்ற நியமனங்கள் மார்க்கெட்டிங் மற்றும் Social Media துறைகளுக்கு மட்டுமே சாத்தியம் என்றும், மற்ற துறைகளில் பட்டயப் படிப்பு இன்றும் மிக முக்கியம் என்றும் விமர்சனம் செய்து வருகின்றனர். லட்சக்கணக்கான இளைஞர்கள் டிகிரி முடித்துவிட்டு வேலை கிடைக்காமல் தவிக்கும் சூழலிலும், பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்து வரும் நிலையிலும், 19 வயதிலேயே தனது திறமையால் ஒரு சர்வதேச நிறுவனத்தில் இடம்பிடித்துள்ள கௌரியின் வெற்றி பலருக்குப் புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.
அதே சமயம், BMW நிறுவனம் இது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும், வெறும் புத்தகப் படிப்பை மட்டும் நம்பியிருக்காமல், மாணவர்கள் தங்களின் தனித்துவமான திறமைகளை வளர்த்துக்கொள்வது எவ்வளவு அவசியம் என்பதைச் சுட்டிக்காட்டும் விதமாக இச்சம்பவம் அமைந்துள்ளது.