லெபனான் தலைநகர் பெய்ரூட் சம்பவத்தை தொடர்ந்து கிடங்குகள் மற்றும் துறைமுகங்களில் இருப்பில் இருக்கும் அபாயகரமான மற்றும் வெடிக்கும் தன்மை கொண்ட பொருட்கள் உள்ள இடங்களில் தீ தடுப்பு மற்றும் அவரசர கால பாதுகாப்பு நடவடிக்கைகள் முறையாக பூர்த்தி செய்துள்ளனவா என்பதை உறுதி செய்ய மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியம் உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து சென்னைக்கு அருகில் உள்ள கிடங்கில் சுமார் 37 கன்டைனர்களில் கடந்த ஐந்து ஆண்டுகளாக வைக்கப்பட்டுள்ள அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக உள்ளது என்றும். அந்த கிடங்கை சுற்றிலும் இரண்டு கிலோமீட்டர் வரை குடியிருப்பு பகுதிகள் எதுவும் இல்லை என்றும் சுங்க அதிகாரிகள் அறிக்கை வெளியிட்டிருந்தனர். தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கை சுங்க அதிகாரிகளின் அறிக்கையோடு முரண்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்தியாவில் அதிகளவிலான அம்மோனியம் நைட்ரேட் இறக்குமதி செய்து வரும் ஒரு முக்கிய துறைமுகமான விசாகப்பட்டினத்தில் சுமார் 18800 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட் இருப்பதாக தெரிவித்துள்ளார் விசாகப்பட்டினத்தின் தொழிற்சாலைகளுக்கான ஆய்வாளர்.
‘தனியார் நிறுவனம் ஒன்று 18800 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்டை விசாகப்பட்டினத்தில் உள்ள சுக்கவனிபலம் கிடங்கில் சேமித்து வைத்துள்ளது. இந்த வகை ரசாயனம் வெடி பொருளாகவும், உர பயன்பாடு இரண்டு தரங்கள் இருக்கின்றன. இதில் இங்குள்ளவை எந்த தரத்தை சேர்ந்தவை என்பதில் தெளிவு இல்லை’ என அவர் தெரிவித்துள்ளார்.
அதிக அளவிலான அம்மோனியம் நைட்ரேட்டை ஒரே இடத்தில் சேமித்து வைத்ததற்காக ஆந்திர மாசு கட்டுப்பாட்டு வாரியம் அந்த தனியார் நிறுவனத்திற்கு நோட்டீஸ் கொடுத்துள்ளது. அதோடு இன்று காலை அந்த நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் தீ தடுப்பு மற்றும் அவசர கால நடவடிக்கைகள் அங்கு எடுக்கப்பட்டுள்ளனவா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.