டெல்லியில் கடந்த 10 ஆண்டுகளில் 1.84 லட்சம் குழந்தைகள் காணாமல் போனதாக புகார் செய்யப்பட்டுள்ளது. இதில் 1.33 லட்சம் குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், 50,771 குழந்தைகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. தொடர்ந்து, சிறுவர்களை விட சிறுமிகளே அதிகமாக காணாமல் போய் இருப்பதாக இத் தகவல்களின் மூலம் தெரியவருகிறது.
தலைநகர் டெல்லியில் மட்டும் கடந்த 10 ஆண்டுகளில் காவல்துறைக்கு, சுமார் 1 லட்சத்து 84 ஆயிரம் குழந்தைகள் காணாமல் போனதாக புகார் வந்துள்ளது. அதில், 1.33 லட்சம் பேர் கண்டுபிடிக்கப்பட்டாலும், 50 ஆயிரத்து 771 குழந்தைகளின் நிலைமை என்ன ஆனது என்பது இன்றளவும் தெரியாமலேயே இருந்து வருகிறது. 2015ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரையிலான தரவுகளின்படி, 2019ஆம் ஆண்டில் 18 ஆயிரத்து 83 குழந்தைகள் காணாமல் போனதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, 2023இல் 18 ஆயிரத்து 197 குழந்தைகளும், அதிகபட்சமாக 2024இல் 19 ஆயிரத்து 47 குழந்தைகளும் காணாமல் போயுள்ளனர். மிகக் குறைந்த எண்ணிக்கையாக கொரோனா ஊரடங்கு காலமான 2020இல்13 ஆயிரத்து 647 குழந்தைகள் காணாமல் போனதாக பதிவாகியுள்ளது. இதில், ஆண் - பெண் என பாலின வாரியாக பார்க்கும்போது, ஒவ்வொரு ஆண்டும் சிறுவர்களை விடச் சிறுமிகளே அதிகமாகக் காணாமல் போயுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் மொத்தமாக 98 ஆயிரத்து 36 சிறுமிகள் காணாமல் போனதாகப் புகாரளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், 86 ஆயிரத்து 368 சிறுவர்கள் காணாமல் போயுள்ளனர். இதில், 70 ஆயிரத்து 696 சிறுமிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுமிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.