இந்தியா

அவசரமாக நிறைவேற்றப்படும் மசோதாக்களை எதிர்த்து எதிர்க்கட்சிகள் கடிதம் 

அவசரமாக நிறைவேற்றப்படும் மசோதாக்களை எதிர்த்து எதிர்க்கட்சிகள் கடிதம் 

webteam

நாடாளுமன்றத்தில் முக்கிய மசோதாக்கள்  போதிய விவாதங்கள் இன்றி அவசர அவசரமாக நிறைவேற்றப்படுவதாக 17 எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

மாநிலங்களவையில் நேற்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்திருத்த மசோதா மீதான விவாதம் நடைபெற்றது. இந்த மசோதாவை ‌ஆய்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை அரசு நிராகரித்தது. இதனையடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். 

இந்நிலையில் மாநிலங்களவையில் அவசர அவசரமாக சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்படுவது தொடர்பாக அவையின் தலைவர் வெங்கய்யா நாயுடுவிற்கு கடிதம் எழுதியுள்ளனர். இந்தக் கடிதத்தில் 17 கட்சிகளின் எம்பிக்கள் தங்களின் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.

மேலும் 14ஆவது மக்களவையில் 60% மசோதாக்களும் 15வது மக்களவையில் 71% மசோதாக்களும் 16வது மக்களவையில் 26% மசோதாக்களும் ஆய்வுக்குழுவின் பரி‌சீலனைக்கு அனுப்பப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். 

நடப்பு மக்களவைத் தொடரில் 14 மசோதாக்கள் எவ்வித ஆய்வுக்கும் உட்படுத்தப்படாமல் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அவசர அவசரமாக மசோதாக்களை நிறைவேற்றுவது பெரும் ஆபத்துகளுக்கு வழிவகுக்கும் வாய்ப்பு இருக்கும். எனவே இந்த விவகாரத்தில் மாநிலங்களவைத் தலைவர் தலையிட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தக் கடிதத்தில் திமுக எம்பி திருச்சி சிவா, மதிமுக எம்பி வைகோ, திரிணாமுல் எம்பி டேரிக் ஓப்ரேன் மற்றும் காங்கிரஸ் எம்பி ஆனந்த் ஷர்மா  உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.