மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் உள்ள ‘அங்கித் சேவாதம்’ ஆசிரமத்தில் 17 மாற்றுத்திறனாளி குழந்தைகள்உயிரிழந்தது தொடர்பாக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ளது.
இந்த இறப்புகள் அனைத்தும் அங்கித் சேவாதம் ஆசிரமத்தில் நடக்கவில்லை. முன்னதாக கடந்த 2024ஆம் ஆண்டு இந்தூரில் அமைந்திருக்கும் யுக் புருஷ் ஆசிரமத்தில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில் 10 குழந்தைகள் இறந்தனர் மற்றும் 60 க்கும் மேற்பட்டோர் நோய்வாய்ப்பட்டனர். இறந்த குழந்தைகள் கடுமையான இரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுடையவர்களாக இருந்தனர். மேலும் அவர்கள் சுவாசம் தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொண்டதாக அதிகாரிகள் கூறியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து அப்போதைய இந்தூர் கலெக்டர் ஆஷிஷ் சிங், அந்த ஆசிரமத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்து, 86 மாற்றுத்திறனாளி குழந்தைகளை உஜ்ஜைனின் சேவாதாம் ஆசிரமத்திற்கு உடனடியாக மாற்ற டிசம்பர் 25, 2024 அன்று உத்தரவிட்டார்.
மாற்றத்திற்குப் பிறகும் இறப்புகள் தொடர்ந்ததால், இப்போது ஆய்வுக்கு உட்பட்டுள்ளது. கடந்த 14 மாதங்களில், 10 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 17 பேர் இறந்துள்ளனர் . புகார்களைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில், இறப்பு எண்ணிக்கை 17 ஆக இருப்பது உறுதி செய்யப்பட்டது.
ஆசிரமத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமை, முறையான மருத்துவக் கண்காணிப்பு இல்லாதது மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு போன்றவை இந்த மரணங்களுக்குக் காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இந்த விவகாரத்தை ஒரு முக்கிய மனித உரிமை மீறலாகக் கருதிய உயர்நீதிமன்றத்தின் இந்தூர் கிளை, மாநில அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.