இந்தியா

'பப்ஜி விளையாடுவதை தடுப்பாயா?' - பெற்ற தாயையே சுட்டுக்கொன்ற 16 வயது சிறுவன்

ஜா. ஜாக்சன் சிங்

பப்ஜி விளையாடுவதை தடுத்ததற்காக தனது தாயை 16 வயது சிறுவன் சுட்டுக் கொன்ற சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச தலைநகர் லக்னோவை சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன் அங்குள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளான். கடந்த கொரோனோ ஊரடங்கின் போது வீட்டில் இருந்ததால் பப்ஜி எனப்படும் ஆன்லைன் விளையாட்டின் மீது அவனுக்கு அதீத மோகம் ஏற்பட்டுள்ளது. நண்பர்களுடன் சேர்ந்து தொடர்ந்து விளையாடியதால் ஒருகட்டத்தில் பப்ஜி விளையாட்டுக்கு அவன் அடிமையாகவே மாறிவிட்டான். கொரோனா ஊரடங்கு முடிந்து பள்ளி திறந்த பிறகும் அவனால் அந்த விளையாட்டை கைவிட முடியவில்லை.

பள்ளிக்கு செல்லும் போதும், வீட்டுக்கு வந்த பிறகும் செல்போனில் பப்ஜி விளையாடுவதே அவனது வாடிக்கையாக இருந்திருக்கிறது. இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக கடந்த வாரம் பள்ளி நிர்வாகம் அவனது பெற்றோரை அழைத்து கண்டித்தும் இருக்கிறது. இதனைத் தொடர்ந்து, தனது மகன் பப்ஜி விளையாடுவதை அவனது பெற்றோர் அனுமதிக்கவில்லை. இதனால் சில தினங்களாக அவன் கடும் அதிருப்தியிலும், மன உளைச்சலிலும் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு யாருக்கும் தெரியாமல் சிறுவன் செல்போனை எடுத்து பப்ஜி விளையாடிக் கொண்டிருந்தான். இதனை பார்த்த அவனது தாயார், செல்போனை அவனிடம் இருந்து வலுக்கட்டாயமாக வாங்கியிருக்கிறார். இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற சிறுவன், வீட்டின் பீரோவில் இருந்து தனது தந்தையின் கைத்துப்பாக்கியை எடுத்து தாயாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அவனது தாயார் உயிரிழந்தார்.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் தெரிவித்த தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்ற போலீஸார், அந்த சிறுவனை கைது செய்தனர். அவனிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.