இளம் பெண்ணை காதலித்து, கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்து விற்பனை செய்த கும்பலை சேர்ந்த பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லி சுல்தான்புரியை சேர்ந்தவர் சுமதி (16). பெயர் மாற்றப்பட்டுள்ளது. அதே பகுதியை சேர்ந்தவர் அபிஷேக் (18). இரண்டு பேருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. கடந்த சில நாட்களுக்கு முன் ஹரித்துவாருக்கு சுமதியை அழைத்துச் சென்றார் அபிஷேக். அங்கு நான்கு நாட்கள் சுமதியை பாலியல் வன்கொடுமை செய்தார். பின்னர் டெல்லி திரும்பிய அவர்கள், பழைய ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் தங்கினர். அங்கு ரவி என்பவரை சந்தித்தனர். அவர் இருவருக்கும் வேலை வாங்கித் தருவதாகச் சொன்னார். பின்னர் காஸியாபாத்தில் உள்ள அவர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். மறுநாள், ரவியுடன் வெளியில் சென்றார் அபிஷேக். ஆனால் திரும்பி வரவில்லை.
ரவி மட்டும் வந்தார். ‘அபிஷேக்கின் வேலைக்கு ஏற்பாடு செய்துவிட்டேன். அவன் நாளை வருவான்’ என்று சொன்னார். அதை நம்பினார் சுமதி. மறுநாள் ரவியின் மனைவி ரிங்கி வீட்டில் இருந்து வெளியே சென்றார். இதைப் பயன்படுத்திக்கொண்டு சுமதியை பாலியல் வன்கொடுமை செய்தார் ரவி.
ரிங்கி வீட்டுக்குத் திரும்பியதும் இதை அவரிடம் அழுதுக்கொண்டே சொன்னார் சுமதி. அவர் கண்டுகொள்ள வில்லையாம். பின்னர் இரண்டு பேர் வந்தனர். சுமதியைப் பார்த்தனர். அவரை அழைத்துக்கொண்டு ரோகிணி பகுதிக்கு சென்றனர். அங்கு அசோக் கோயல் என்பவரிடம் சுமதியை ஒப்படைத்துவிட்டு வந்துவிட்டனர்.
தனக்குப் பின்னே என்ன நடக்கிறது என்பது சுமதிக்குப் புரியவில்லை. பிறகு அசோக் அவர் நடத்தும் ’ஸ்பா’வுக்கு அழைத்துச் சென்றார். அங்கு ரோகித் மற்றும் முகேஷ் ஆகியோர் பாலியல் வன்கொடுமை செய்தனர். பின்னர் அவர்கள் மசாஜ் சென்டருக்கு வரும் வாடிக்கையாளரின் ஆசைக்கு இணங்குமாறும் கூறினர். சுமதியை அவர்கள் அனைவரும் சேர்ந்து விற்றுவிட்டது பின்னர்தான் தெரியவந்தது.
இதையடுத்து அங்கிருந்து தப்பி வந்த சுமதி, பெற்றோருக்கு போன் செய்து தன்னை காப்பாற்றும்படி கண்ணீர் விட்டார். அவர்கள் போலீசில் புகார் செய்தனர். போலீசார், பரிசோதனைக்காக சுமதியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அதிரடியாக களமிறங்கிய போலீசார், காதலன் அபிஷேக், ரவி, ரிங்கி, ரோகித், முகேஷ் ஆகியோரை கைது செய்தனர்.