இந்தியா

குஜராத்: சாலையோரம் தூங்கிய தொழிலாளர்கள் மீது லாரி ஏறி 15 பேர் உயிரிழப்பு

Sinekadhara

குஜராத்தில் சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்த கூலி தொழிலாளர்கள்மீது லாரி மோதியதில் 13பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள கொசாம்பா என்ற இடத்தில் ராஜஸ்தான் மாநிலத்தின் பான்ஸ்வாடா மாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் தங்கி வேலை செய்துவந்தனர். இவர்கள் பகல் நேரத்தில் வேலை செய்து முடித்துவிட்டு இரவு சாலையோரத்தில் உள்ள நடைப்பாதையில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தனர். திங்கட்கிழமை இரவு அவர்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது அந்த சாலையில் கரும்பு ஏற்றிக்கொண்டுவந்த லாரி நிலை தடுமாறி அவர்கள்மீது ஏறிச்சென்றது. இதனால் தூங்கிய நிலையிலேயே 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதன்பிறகு நடத்திய சோதனையில் 15 பேர் இறந்தது கண்டறியப்பட்டது.

இதுகுறித்து அறிந்த பொதுமக்களும் காம்ரெஜ் பகுதி போலீஸாரும் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று, அங்கு காயமடைந்திருந்த 6 பேரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர். இறப்பு எண்ணிக்கை அதிகமாகலாம் என்றும் தெரிவித்திருக்கின்றனர்.

இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, உயிர்களை இழந்து வாடும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் பிரதமர் நிதியுதவி திட்டத்தின் மூலம் தலா ரூ. 2 லட்சம் இழப்பீடாகக் கொடுக்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என்றும் குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானியும் தெரிவித்திருக்கிறார். ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலாட்டும் தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்திருக்கிறார்.