தீ விபத்து Pt web
இந்தியா

லக்னோ | பயிற்சி மையத்தில் தீ விபத்து.. 15 பேர் உயிரிழப்பு!

உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோ அலிகஞ்ச் பகுதியில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 15 மாணவர்கள் உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Premkumar S

உத்தரப் பிரதேசம் லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில், 3 மாடி வணிக வளாகம் ஒன்றின் மேல் தனியார் பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தசூழலில் தான், இன்று பிற்பகல் 3 வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ பயிற்சி மையத்திற்கு பரவிய நிலையில், பல்வேறு மாணவர்கள் முதல் மாடியில் வெளியில் குதித்து உயிர்பிழைத்திருக்கின்றனர். எனினும், 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளேயே சிக்கிக் கொண்ட நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர். போராடி தீயைக் கட்டுப்படுத்தினர்.

தொடர்ந்து, மீட்புப் பணியில் ஈடுபட்ட நிலையில், தீ விபத்தில் சிக்கி 15 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தசூழலில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் அறிவித்துள்ளார்.

தொடர்ந்து தீ விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், லக்னோ அலிகஞ்ச் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் மாணவர்கள் உயிரிழந்தது மிகவும் வேதனையளிப்பதாகக் கூறியுள்ளார். தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்ததுடன், காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், சம்பவத்திற்கான காரணத்தை விரைவாக கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அதேபோல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்த மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தசூழலில் தான், பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.