கர்நாடகாவில் கால்வாயில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள பாண்டவபுரம் கனகனமாரடியில் தனியார் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. பேருந்தில் ஏராளமானோர் இருந்தனர். அப்போது திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, அருகில் இருந்த கால்வாய்க்குள் கவிழ்ந்தது. இதில் பலர் தண்ணீருக்குள் மூழ்கினர். சிலர் நீந்தி வெளியேறினர்.
தகவல் அறிந்ததும் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். உயிரிழந்தவர்களில் 13 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.