இந்தியா

2 வருடங்களில் 15 ஆயிரம் பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு - குஜராத்தில் பரிதாபம்!

2 வருடங்களில் 15 ஆயிரம் பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு - குஜராத்தில் பரிதாபம்!

webteam

குஜராத் மாநிலத்தில் கடந்த இரண்டு வருடத்தில் சிகிச்சை குறைபாடு காரணமாக 15ஆயிரத்திற்கும் அதிகமான பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது

குஜராத் மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கேள்வி நேரத்தின் போது மாநில சுகாதாரத்துறை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர், பச்சிளங்குழந்தைகளின் மருத்துவ சிகிச்சை குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு துணை முதல்வரும், சுகாதாரத்துறையை கவனிப்பவருமான நிதின் படேல் பதில் அளித்தார்.

அதன்படி, 2018-19ம் ஆண்டுகளில் 1.06 லட்சம் குழந்தைகள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதாகவும், அதில் சிகிச்சை பலனின்றி 15013 குழந்தைகள் உயிரிழந்ததாகவும் தெரிவித்தார். இந்த உயிரிழப்பு குஜராத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக நடந்துள்ளது என கூறப்படுகிறது. அதிகபட்சமாக அகமதாபாத்தில் 4322 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் என மாநில அரசு தெரிவித்துள்ளது.

இந்தத் தகவலுக்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர். உலகத் தலைவரின் வருகைக்காக கோடி கோடியாக செலவு செய்யும் அரசு, மாநிலத்தின் சுகாதாரத்துறையை மேம்படுத்தவும், குழந்தைகளின் ஆரோக்கியத்தை காக்கவும் தவறிவருவதாக பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், பச்சிளம் குழந்தைகளில் உயிரிழப்பை தடுக்க அரசு அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக துணை முதல்வர் நிதின் படேல் சட்டப்பேரவையில் உறுதி அளித்தார். அதற்காக, மருத்துவ அதிகாரிகள், செவிலியர்கள் உள்ளிட்டவர்களை அனைத்து இடங்களில் நியமனம் செய்துவருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், அனைத்து மருத்துவ உபகரணங்களுக்கு அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.