சத்தீஸ்கர் ஒடிசா எல்லையை ஒட்டிய மெயின்பூர் காவல்நிலைய பகுதிக்கு உட்பட்ட காட்டில், காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையின்போது 14 நக்சல்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். நேற்று (ஜன 20) இரவு மற்றும் இன்று (ஜன 21) அதிகாலை என இரு வேளைகளில் இந்த துப்பாக்கிச்சூடு நிகழ்ந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள குலாரிகாட் எனும் காட்டுப்பகுதியில், ஒடிசாவின் நுவாபாடா எனும் எல்லைப்பகுதியில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து ஜனவரி 19 ஆம் தேதி இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாவட்ட ரிசர்வ் காவல்படை, மத்திய ரிசர்வ் காவல்படை, சத்தீஸ்கரைச் சேர்ந்த கோப்ரா படையினர் மற்றும் ஒடிசாவைச் சேர்ந்த சிறப்பு நடவடிக்கைக்குழுவினர் அடங்கிய பாதுகாப்புப் படையினர் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று நடந்த முதற்கட்ட சம்பவத்தில் இரண்டு பெண் நக்சலைட்டுகள் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு கோப்ரா ஜவான் ஒருவரும் காயமடைந்துள்ளார்.
இந்த சம்பவத்திடையே ரூ.1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்ட நக்சலைட் ஒருவரும் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கிச்சூடு தொடர்ந்து நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட நக்சலைட்டுகளிடம் இருந்து வெடிமருந்துகள் மற்றும் ஆயுதங்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஜனவரி 2025ல் கடந்த 21 நாட்களில் மட்டும் 45 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
ஜனவரி 17 ஆம் தேதி சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தில் நக்சல்கள் வெடிகுண்டு வைத்து தாக்குதல் நடத்தியதில் 2 எல்லைப்பாதுகாப்புப் படை ஜவான்கள் காயமடைந்தனர். இந்த சம்பவத்தினை நாராயண்பூர் எஸ்பியும் உறுதிப்படுத்தியுள்ளார்.