model image x page
இந்தியா

உலகின் கடும் வெப்ப அபாயத்தில் 14 இந்திய நகரங்கள்.. காரணம் என்ன?

குறிப்பாக, இந்த ஆண்டு இந்தியா முழுவதும் வெப்ப அலைகள் வழக்கத்தைவிட முன்னதாகவே வந்துவிட்டன.

Prakash J

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்ட புதிய ஆய்வின்படி, உலகின் மிக மோசமான வெப்ப அபாயத்தை எதிர்கொள்ளும் 50 நகரங்களில் இந்தியாவின் 14 நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தியா முழுவதும் வெப்ப அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டிலும் அதன் தாக்கம் எதிரொலிக்கிறது. பல்வேறு மாவட்டங்களில் வெயில் சதத்தை தாண்டி அடிக்க ஆரம்பித்துவிட்டது. குறிப்பாக, இந்த ஆண்டு இந்தியா முழுவதும் வெப்ப அலைகள் வழக்கத்தைவிட முன்னதாகவே வந்துவிட்டன. வழக்கமாக கோடைக்காலம் உச்சக்கட்டம் தொடங்குவதற்கு பல வாரங்களுக்கு முன்பே, ஏப்ரல் மாதத்திலேயே பல பகுதிகளில் கடும் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அது தற்போதும் தொடர்கிறது. இந்த நிலையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்ட புதிய ஆய்வின்படி, உலகின் மிக மோசமான வெப்ப அபாயத்தை எதிர்கொள்ளும் 50 நகரங்களில் இந்தியாவின் 14 நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

இதில் அகமதாபாத், நாக்பூர், மற்றும் மதுரை ஆகிய நகரங்கள் உலக அளவில் முதல் 10 இடங்களுக்குள்ளும் வந்துள்ளன. மேலும் சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய பெருநகரங்களும் இந்த ஆபத்தான பட்டியலில் அடங்கும். இவை தவிர போபால், பாட்னா, ஜெய்ப்பூர், பெங்களுரு, ஹைதராபாத், லக்னோ, கான்பூர், புனே ஆகிய இந்திய நகரங்களும் மோசமான வெப்ப அபாயத்தை எதிர்கொண்டிருக்கும் இந்திய நகரங்கள் பட்டியலில் உள்ளன. பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள நாக்பூரில், கடந்த 12 வெப்ப அலை நாட்களில் மட்டும் 100-க்கும் மேற்பட்டோர் வெயில் கொடுமையால் உயிரிழந்துள்ளனர். நகர்ப்புற வெப்ப அபாயம் என்பது அதிக வெப்பநிலையை மட்டும் சார்ந்தது அல்ல என இந்த ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மரங்கள் போன்ற இயற்கை வெப்பத்தணிப்பு அரண்கள் கடுமையாகக் குறைந்துள்ளது. ஏர் கண்டிஷனர்கள் போன்ற குளிர்விக்கும் உள்கட்டமைப்புகள் பயன்பாடு அதிகரிப்பு, மக்களின் வறுமை மற்றும் சமாளிக்கும் திறன் குறைந்திருப்பது போன்ற சமூக-பொருளாதார காரணிகளும் வெப்பத்தின் பாதிப்பை அதிகரிப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.