நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய 13 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
மேகாலயாவின் கிழக்கு பகுதியில் உள்ளது, ஜைன்டியா மாவட்டம். மலைபிரதேசமான இங்கு ஏராளமான நிலக்கரி சுரங்கங்கள் உள்ளன. அனுமதி பெறாத சுரங்கங்களும் உள்ளன. இதில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இங்குள்ள சான் கிராமத்தில் அமைந்துள்ள சுரங்கத்தில் அருகில் உள்ள ஆற்றில் இருந்து தண்ணீர் புகுந்தது. 370 அடி ஆழ சுரங்கத்தில் சுமார் 70 அடிக்கு தண்ணீர் நிறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. நிலக்கரி சுரங்கத்தில் தண்ணீர் நுழைந்ததும் 5 தொழிலாளர்கள் வெளியேறினர். மேலும் 13 பேர் அங்கு சிக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து போலீசாரும், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் சுமார் 100 பேர் விரைந்து சென்று மீட்பு பணிகளை தொடங்கி யுள்ளனர். சுரங்கத்தில் சிக்கியிருக்கும் தொழிலாளர்களை உயிருடன் மீட்பதற்கான முயற்சி நடந்து வருகிறது. முதலில் சுரங்கத்தை சூழ்ந்தி ருக்கும் தண்ணீரை வெளியேற்றும் பணியில் மீட்புக்குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
கைவிடப்பட்ட அந்த நிலக்கரி சுரங்கம், கடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் சட்ட விரோதமாக செயல்பட துவங்கியிருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதை நடத்தி வந்த லும்தாரி கிராமத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் சுக்லைன் தலைமறைவாகி விட்டார்.
இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என்று மாநில முதலமைச்சர் கான்ராட் கே. சங்க்மா தெரிவித்துள்ளார்.