பண மதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து பொது மக்கள் தங்கள் கருத்துக்களை என்எம் என்ற செயலி மூலம் தெரிவிக்கலாம் என பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.
பணமதிப்பு நீக்க நடவடிக்கையால், கறுப்பு பண ஒழிப்புக்கு எதிரான 125 கோடி மக்களின் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஊழல் மற்றும் கறுப்பு பணத்தை ஒழிக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கையை ஆதரிக்கும் மக்களுக்கு தலை வணங்குவதாக அவர் கூறியுள்ளார்.
பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் பலன்கள் குறித்த 7 நிமிட குறும்படத்தையும் பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். கறுப்பு பணத்திற்கு எதிராக மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் NM என்ற ஆப் மூலம் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என மோடி குறிப்பிட்டுள்ளார். பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு புதிதாக வருமான வரி செலுத்தியோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் 26 புள்ளி 6 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த நிதியாண்டில் புதிதாக வரி செலுத்தியோரின் எண்ணிக்கை 66 லட்சம் இருந்த நிலையில், தற்போது 84 லட்சமாக உயர்ந்துள்ளது. இதேபோன்று வருமான வரி கணக்கு தாக்கல் செய்த நபர்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டை விட 27 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.