இந்தியா

பெற்றோருடன் சண்டை: விமானத்தில் பெங்களூர் செல்ல முயன்ற சிறுவன் மீட்பு!

பெற்றோருடன் சண்டை: விமானத்தில் பெங்களூர் செல்ல முயன்ற சிறுவன் மீட்பு!

webteam

பெற்றோருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, வீட்டை விட்டு வெளியேறி பெங்களூர் செல்ல முயன்ற 12 வயது சிறுவனை போலீசார் மீட்டு வீட்டில் ஒப்படைத்தனர்.

டெல்லியின் தென்கிழக்கு பகிதியில் இருக்கிறது பரிதாபாத். இந்தப் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின் செல்போனுக்கு கடந்த வெள்ளிக் கிழமை இரவு 10 மணியளவில் ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது. அதைப் பார்த்தவருக்கு அதிர்ச்சி. அதில், அவரது டெபிட் கார்டை பயன்படுத்தி விஸ்தாரா விமானத்தில் பெங்களூர் செல்வதற்கான டிக்கெட் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதிர்ச்சியில் இருந்து மீளாத அவர், இதை யார் செய்திருப்பார்கள் என்று யோசித்தார். வீட்டில் இருந்த, தனது ஏழாவது படிக்கும் மகனை காணவில்லை. 

இது அவன் வேலைதான் என்று நினைத்த அவர் பதறியபடி, உடனடியாக டெல்லி போலீஸுக்கு ஃபோன் செய்து, ’எனது 12 வயது மகன், வீட்டை விட்டு ஓடிவிட்டான். பெங்களூர் விமானத்தில் செல்வதற்காக டிக்கெட் புக் செய்துள்ளான். அவனைத் தடுத்து நிறுத்துங்கள்’ என்று கெஞ்சினார். உடனடியாக செயல்பட்ட போலீசார், டெல்லி விஸ்தாரா விமான நிறுவனத்துக்கு ஃபோன் செய்து, ’அந்த சிறுவன் வீட்டுக்குத் தெரியாமல் டிக்கெட் புக் செய்துவிட்டான். அவன் வந்தால் பிடித்து வையுங்கள்’ என்றனர். 

அதன்படி, அந்த சிறுவன் வந்தான். போர்டிங் பாஸ் கேட்டான். அவனை அன்பாக அழைத்துக் கொண்டு தனியாக அந்த விமான ஊழியர்கள், அவனை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

‘பெற்றோருடன் பிரச்னை ஏற்பட்டது. இதனால் பெங்களூரில் இருக்கும் உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக விமான நிலையம் வந்தேன்’ என்று தெரிவித்தான். இதையடுத்து போலீசார் அவனது பெற்றோரை அழைத்து அட்வைஸ் செய்து, சிறுவனை ஒப்படைத்தனர்.