கடந்த சில வாரங்களுக்கு முன்பு டெல்லியில் உள்ள பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனையடுத்து மோப்ப நாய், வெடிக்குண்டு சோதனைப்படை என அனைத்தும் பள்ளிகளில் குவிக்கப்பட்டன. இதனால், சம்பந்தப்பட்ட பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.
பின்னர், சோதனை மேற்கொள்ளப்பட்டதில் வெடிக்குண்டு வைப்பட்டுள்ளதாக வந்த மிரட்டல் போலியானது என்று கண்டறியப்பட்டது. பின்னர், சைபர் காவல்துறையினர் போலி வெடிக்குண்டு மிரட்டல் வந்த மின்னஞ்சலை அனுப்பியது யார்? என்று தொடர் விசாரணை நடத்தியுள்ளனர். இந்தநிலையில்,தான், போலி வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் என்பது தெரியவந்துள்ளது.
தேர்வு எழுத ஆர்வம் கொள்ளாத இம்மாணவர் தேர்வுகளை நிறுத்துவதற்காக, இதனை செய்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.
மேலும், யாருக்கும் சந்தேகம் ஏற்படாமல் இருக்க வெடிகுண்டு மெயில் விடுத்த ஒவ்வொரு முறையும் தனது பள்ளியை தவிர்த்து மற்ற பள்ளிகளின் பெயரை குறிப்பிட்டு வளாகத்தில் ஆபத்தான வெடிப்பொருட்கள் இருப்பதாக மின்னஞ்சல் அனுப்பியுள்ளார் இந்தமாணவர். இப்படி, 6 முறை 23 பள்ளிகளுக்கு வெடிகுண்டு தொடர்பாக மின்னஞ்சலை அனுப்பியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த புதன்கிழமையும், வசந்த் விஹாரில் உள்ள டெல்லி பப்ளிக் மற்றும் ஆர்க்கே புரம், ப்ளூ பெல்ஸ் மற்றும் தாகூர் இண்டர்நேஷனல் உள்ளிட்ட பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து காவல்துறை சம்பந்தப்பட்ட மாணவனை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் இதுபோன்ற ஒரு சம்பவத்தில், டிபிஎஸ் ஆர்கே புரம் மற்றும் பஸ்சிம் விஹாரில் உள்ள ஜிடி கோயங்கா பள்ளி உட்பட 40 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. பள்ளி கட்டிடங்களுக்குள் சிறிய வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாகவும், அவற்றை செயலிழக்கச் செய்ய 30,000 டாலர்கள் தேவைப்படுவதாகவும் அந்த மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.