ஆந்திர மாநிலத்தில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது.
ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டம் தேவிப்பட்டினம் அருகே உள்ள பொச்சம்மா கோயிலில் இருந்து 63 சுற்றுலா பயணிகள், 9 பணியாளர்களுடன் பாபிகொண்டாலு என்ற சுற்றுலா தளத்தை நோக்கி படகில் சென்றுக் கொண்டிருந்தனர். கச்சுலுரு என்ற இடம் அருகே படகு சென்றுக்கொண்டிருந்த போது, திடீரென கவிழ்ந்தது. படகில் பயணம் செய்த 72 பேரும் ஆற்றில் மூழ்கிய நிலையில், உயிர் காக்கும் கவசம் அணிந்திருந்த 25-க்கும் மேற்பட்டோர் நீந்தி கரை சேர்ந்ததாக கூறப்படுகிறது.
எஞ்சியவர்களை மீட்பதற்காக கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களைச் சேர்ந்த தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 2 ஹெலிகாப்டர்களும் 6 படகுகளும் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. நீரில் மூழ்கியவர்களில் 12 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 10-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் சென்றதே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. நீரில் 30க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.