இந்தியா

ரூ.112 கோடி! போதைப் பொருள் கடத்திய தமிழக இளைஞர் பெங்களூரில் கைது! சிக்கியது எப்படி?

webteam

பெங்களூரு ரயில் நிலையத்தில் 112 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்

கர்நாடக மாநிலம் பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்தில் இருந்து டெல்லிக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஹெராயின் கடத்தி செல்லப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, வருவாய் நுண்ணறிவுப் பிரிவினர் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது இளைஞர் ஒருவரின் டிராலி பேக்கில் 16 கிலோ அளவுக்கு ஹெராயின் போதைப்பொருள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட இந்த போதைப்பொருளின் மதிப்பு 112 கோடி ரூபாய் ஆகும். விசாரணையில் அந்த இளைஞர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதும், எத்தியோப்பியா நாட்டின் தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து விமானம் மூலம் பெங்களூருவுக்கு ஹெராயினை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதனை பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு ரயில் மூலம் அனுப்ப முயன்றதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இளைஞரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.