இந்தியா

"ஆண்டுகள் கடந்தாலும் மாறாத வடுக்கள்".. மும்பை தீவிரவாத தாக்குதல் நினைவுதினம் !

jagadeesh

2008-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி காலை முதல் மாலை வரை மும்பை மாநகர மக்களுக்கு எல்லாமே வழக்கம்போல இயல்பாக சென்றுக்கொண்டுதான் இருந்தது. எப்போதும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத மும்பை நகர மக்கள் தங்களது வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்தனர். மிக முக்கியமாக சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் தத்தமது இல்லங்களுக்கு செல்ல காத்துக் கொண்டு இருந்தனர் மக்கள், அப்போதுதான் அந்த கோர சம்பவம் நடந்தேறியது. திடீரென துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. கண்மூடித்தனமான தாக்குதல்கள் ரத்த வெள்ளத்தில் மிதந்தது மராட்டிய மாமன்னன் பெயரில் உருவான சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம்.

ஆம், மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளான முதல் இடம் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம்தான். கடந்த 2008 நவம்பர் மாதம் 26-ம் தேதி லஸ்கர் இ தொய்பா மூலம் மும்பையில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் இந்திய வரலாற்றில் மிக மோசமான தாக்குதல் ஆகும். லஸ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பை சேர்ந்த 10 ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகள், கடல் வழியாக, மீனவர்களை கொன்றுவிட்டு, படகுகளை திருடி மும்பைக்கு வந்தனர். இவர்கள் இரண்டு பிரிவுகளாக பிரிந்து நவம்பர் 26-ம் தேதி மாலை தங்கள் ஆபரேஷனில் இவர்கள் முதலில் தாக்குதல் நடத்தியது, மும்பை சத்திரபதி சிவாஜி ரயில் நிலையத்தில்தான். இந்த தாக்குதலில் 58 பேர் பலியானார்கள். 120 பேர் காயம் அடைந்தனர். அஜ்மல் கசாப் வழிநடத்திய இந்த தாக்குதலை மூன்று தீவிரவாதிகள் நடத்தினர். இந்த தாக்குதல் 90 நிமிடம் நீடித்தது.

இந்த தாக்குதல் நடந்த இரண்டு நிமிடத்தில் மும்பையில் முக்கியப் புள்ளிகள் வசிக்கும் நாரிமன் இல்லத்திலும், லெபர்ட் கஃபோவிலும் தாக்குதல் நடத்தினார்கள். 25 பேர் வரை இந்த தாக்குதலில் பலியானார்கள். இதில் இஸ்ரேலை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக பலியானார்கள். அதன்பின் தீவிரவாதிகள் வெளிநாட்டினர் வசிக்கும் பெரிய ஹோட்டல்களில் தாக்குதல் நடத்தினர். மும்பையில் பிரபலமான தாஜ் ஹோட்டல், ஓரியண்ட் ஹோட்டல் இடங்களில் தாக்குதல் நடத்தினார்கள். இதில் தீவிரவாத எதிர்ப்பு படை அதிகாரியான ஹேமன்த் கார்கரே உள்ளிட்ட போலீஸார்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இதில் தாஜ் ஹோட்டலிலும், ஓரியண்ட் ஹோட்டலிலும் நடந்த தாக்குதல்தான் மிகப்பெரிய போராட்டமாக மாறியது. ஹோட்டலுக்கு உள்ளே பிணைக்கைதிகள் நூற்றுக்கணக்கில் பிடித்து வைக்கப்பட்டு இருந்தனர். பலர் இதில் வெளிநாட்டினர். பாதுகாப்பு படை வீரர்கள் மூன்று நாட்களாக இவர்களை மீட்கவும், தீவிரவாதிகளை சுட்டுக் கொள்ளவும் போராடினார்கள். இந்தத் தாக்குதல் நவம்பர் 29-ஆம் தேதி வரை நடந்தது. தீவிரவாதிகள் மூன்று ஹோட்டல்களிலும் வைத்திருந்த பிணைக்கைதிகளை கொஞ்சம் கொஞ்சமாக தாக்குதல் அதிகரிக்க அதிகரிக்க விடுவித்தனர். 300-க்கும் அதிகமான பிணைக்கைதிகள் இதில் பிடித்து வைக்கப்பட்டு இருந்தனர். இதில் வெளிநாட்டினர் அதிக அளவில் பிணை கைதிகளாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தாக்குதலின் முடிவில் தீவிரவாதி அஜ்மல் கசாப் தவிர மற்ற அனைத்து தீவிரவாதிகளும் இதில் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். கசாப்பிற்கு தூக்கு தண்டனை அளிக்கப்பட்டது. இந்த தீவிரவாத தாக்குதலில் மொத்தம் 160 பேர் பலியானார்கள். 450-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். இந்தக் கோர தாக்குதல்களுக்கு காரணம் பாகிஸ்தான் தீவிரவாதிகள்தான் காரணம் என அண்மையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்திருந்தார். இந்த படுமோசமான தாக்குதல் நடந்து இன்றோடு 11 ஆண்டுகள் கடந்துவிட்டது. ஆனால், மும்பை மட்டுமல்ல இந்திய மக்களின் மனதில் நீங்காத வடுவாக பதிவான நாளாக இருப்பது மறுப்பதற்கில்லை.