இந்தியா

டெல்லியில் 11 வயது சிறுமி கொலை... மிஸ்டுகால் மூலம் கண்டறிந்த போலீசார்!

webteam

டெல்லி நங்லோய் பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமியொருவர், கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி மர்மமான முறையில் காணாமல் போன சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் 21 வயது இளைஞரொருவர், சிறுமியை கடத்தி கொலை செய்த விஷயத்தை ஒப்புக்கொண்டிருக்கிறார்.

முன்னதாக இச்சம்பவம் குறித்து அந்தச் சிறுமியின் தாய் காவல்துறைக்கு அளித்த புகாரில், “டெல்லி நங்லோய் பகுதியில் நான் வசித்து வருகிறேன். என்னுடைய 11 வயது மகள், கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி காலை 7.30 மணிக்கு பள்ளிக்குச் செல்வதாகச் சொல்லி பேருந்தில் புறப்பட்டுச் சென்றாள். ஆனால், அன்றைய தினம் மாலை பள்ளி முடிந்து என் மகள் வீட்டுக்கு வரவில்லை. அதன்பின் என் மகளைக் காணவில்லை. கண்டுபிடித்து தாருங்கள்” எனத் தெரிவித்திருந்தார்.

இத்துடன், “அன்றைய தினம் காலை 11.50 மணிக்கு என் செல்ஃபோனுக்கு மிஸ்டு கால் ஒன்று வந்தது. அந்த எண்ணிற்கு பின் நான் தொடர்புகொண்டபோது அது ஸ்விட்ச்-ஆஃப் என வந்தது” எனவும் கூறியிருந்தார்.

இதைவைத்து விசாரணை மேற்கொண்ட போலீசார், கிட்டத்தட்ட 12 நாட்களுக்குப்பிறகு மத்திய பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் பதுங்கியிருந்த ரோஹித் என்ற வினோத்தை (21) கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் சிறுமியைக் கடத்தி கொலை செய்ததாக கூறி குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், அந்தச் சிறுமியின் சடலம் வீசப்பட்ட பகுதியை போலீசாரிடம் அடையாளம் காட்டியுள்ளார். அங்கு, அழுகிய நிலையில் இருந்த சிறுமியின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

கைது செய்யப்பட்ட நபரும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தொடர் விசாரணையில் உள்ளார். அதேநேரத்தில், சிறுமி எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து போலீசார் இதுவரை உறுதியாக தகவல் தெரிவிக்கவில்லை. காவல்துறை தரப்பில், “சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானாரா என்பது பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே தெரியவரும். தற்போதைக்கு கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறோம்” என்று மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.