இந்தியா

பிட்புல் நாய் கடித்துக் குதறியதில் சிறுவனின் முகத்தில் 200 தையல்கள்!

JustinDurai

உத்தரப்பிரதேசத்தில் பிட் புல் வகை நாய் கடித்ததில் படுகாயம் அடைந்த 11 வயது சிறுவனின் முகத்தில் 200 தையல்கள் போடப்பட்டுள்ளன.

உத்தரப்பிரதேசம் மாநிலம்  காஜியாபாத்தில் 11 வயது சிறுவன் ஒருவன் தனது வீட்டின் அருகே உள்ள பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது பெண்ணுடன் நடைபயிற்சிக்கு வந்த பிட்புல் நாய் அந்த சிறுவனை தாக்கத் தொடங்கியது. இதில் அலறியடித்தபடி கீழே விழுந்தான் சிறுவன். ஆனாலும் விடாத நாய் அவனது முகம் உள்ளிட்ட இடங்களில் கடித்துக் குதறியது. இதைக்கவனித்த அவ்வழியாக சென்றவர்கள், சிறுவனை நாயிடம் இருந்து மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

நாய் கடித்ததில் படுகாயம் அடைந்த அந்த 11 வயது சிறுவனின் முகத்தில் 200 தையல்கள் போடப்பட்டுள்ளன. இதையடுத்து அனுமதி இல்லாமல் செல்லப்பிராணியை வளர்த்ததாக நாயின் உரிமையாளருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. குழந்தைகள் விளையாடும் பூங்காக்களில் நாய்களை அனுமதிப்பதா என சிறுவனின் உறவினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  

சமீபத்தில் இதே காஜியாபாத் பகுதியில் லிஃப்டில் பெண்ணுடன் வந்த வளர்ப்பு நாய் ஒன்று சிறுவனை கடிப்பதும், அதற்கு சிறுவன் அலறி துடிப்பதும் அதை கண்டும் எந்த பதற்றமும் இல்லாமல் அந்த நாயின் உரிமையாளர் நிற்கும் அதிர்ச்சியான சிசிடிவி காட்சிகள் வெளியாகியிருந்தது. இதற்கு முன்னதாக கடந்த ஜூலை மாதம் உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோவில் வசித்து வந்த ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியை சுஷிலா திரிபாதி, தனது வீட்டில் வளர்த்து வந்த பிட்புல் நாய் கடித்து படுகாயம் அடைந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இதையும் படிக்க: பிட்புல் நாய்கள் ஏன் ஆபத்தானவை? நிபுணர்களின் பகீர் எச்சரிக்கை