ஜெய்சங்கர், டெரிக் ஓ பிரையன்
ஜெய்சங்கர், டெரிக் ஓ பிரையன்  file image
இந்தியா

மாநிலங்களவை தேர்தல்: ஜெய்சங்கர், டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட 11 பேர் போட்டியின்றி தேர்வு!

Prakash J

மேற்கு வங்கத்தில் உள்ள 6 ராஜ்யசபா எம்பிக்கள் (டெரிக் ஓ பிரையன், டோலா சென், பிரதீப் பட்டாச்சார்யா, சுஷ்மிதா தேவ், சாந்தா சேத்ரி, சுகேந்து சேகர் ராய்) குஜராத்தில் உள்ள 3 ராஜ்யசபா எம்பிக்கள் (மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தினேஷ் ஜெமால்பாய் அனவாடியா, லோகன்ட்வாலா ஜுகல் சிங் மாதுர்ஜி) மற்றும் கோவாவில் உள்ள 1 ராஜ்யசபா உறுப்பினர் (வினய் டெண்டுல்கர்) என மொத்தம் 10 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம் விரைவில் முடிவடையவுள்ளது.

ஜெய்சங்கர்

இதையடுத்து இந்த 10 இடங்களுக்கு ஜூலை 24ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், இதற்கான வேட்பு மனுத் தாக்கல் ஜூலை 13ஆம் தேதி தொடங்கும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. மேலும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. லுசினோ ஃபலேரியா தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, அந்த இடத்திற்கும் ஜூலை 24ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இதைத் தொடர்ந்து, குஜராத் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், பாஜகவைச் சேர்ந்த ஜேசங்பாய் தேசாய், கேசரிவேவ் சிங் ஜாலா ஆகியோரும் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதுபோல் மேற்கு வங்கத்தில் டெரிக் ஓ பிரையன், டோலா சென், சுகேந்து சேகர் ராய், சமீருல் இஸ்லாம், பிரகாஷ் சிக், சாகேத் கோகலே ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் டெரிக் ஓ பிரையன், டோலா சென், சுகேந்து சேகர் ராய் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், 11 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் மேற்கு வங்க பாஜகவை சேர்ந்த மூத்த தலைவர் ஆனந்த் மகாராஜும், கோவா பாஜக மாநிலத் தலைவர் சதானந்த் சேட் தனாவடேவும் போட்டியின்றி மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

new parliament building

ஒட்டுமொத்தமாக திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்த 6 பேரும் பாஜகவை சேர்ந்த 5 பேரும் மாநிலங்களவை எம்பிக்களாகி உள்ளனர். இதையடுத்து, பாஜக கூட்டணியின் பலம் 105 ஆக அதிகரித்துள்ளது.