டெல்லி நீதிமன்றத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் எதிரொலியாக, 26 ரவுடி கும்பல்கள் அடையாளம் காணப்பட்டு 107 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
டெல்லியின் ரோகினி பகுதியில் உள்ள நீதிமன்றத்தில் கடந்த 24-ஆம் தேதி வழக்கம்போல் நீதிமன்ற பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. வழக்கறிஞர்கள், பொதுமக்கள் என பலர் தங்கள் வழக்கு விசாரணைக்காக வந்திருந்தனர். அப்போது நீதிமன்ற வளாகத்திற்குள் பிற்பகல் திடீரென புகுந்த ஒரு கும்பல் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியது. இதில், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய தாதாவான ஜிதேந்தர் கோகி கொல்லப்பட்டார். துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் மீது போலீசார் பதில் தாக்குல் நடத்தினர். இதில், 3 பேர் உயிரிழந்தனர். அவர்களில் இரண்டு பேர் வழக்கறிஞர் போன்று உடை அணிந்திருந்தனர். டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், டெல்லி குற்றப்பிரிவு இணை காவல் ஆணையாளர் அலோக் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''டெல்லியில் 26 ரவுடி கும்பல்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. மொத்தம் 188 பேரில் 107 பேர் வரை கைது செய்யப்பட்டு உள்ளனர். இதுதவிர, போதைப் பொருட்கள் கடத்தல், ஆயுதக் கடத்தல் மற்றும் பல்வேறு குற்றங்களில் ஈடுபடும் கும்பல்களும் உள்ளன. இவர்கள் தங்களுக்குள் கூட்டு சேர்ந்து கொண்டு குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவதும் உண்டு. இந்த கும்பல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்'' என அவர் கூறியுள்ளார்.