ஜூலையில் தமிழகத்துக்கு 104 டிஎம்சி நீர் காவிரி ஆற்றில் இருந்து திறக்கப்பட்டதாக கர்நாடகா தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பு படி காவிரி ஒழுங்காற்று குழு அமைக்கப்பட்டுள்ளது. பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு காவிரி ஒழுங்காற்று குழு செயல்பட்டு வருகிறது. தண்ணீர் திறப்பு குறித்த விவாதம் இந்தக் குழுவின் கூட்டங்களில் விவாதிக்கப்படுகிறது.
இதனிடையே, கர்நாடகாவில் குடகு நீர் பிடிப்பு பகுதியில் தொடர் கனமழை பெய்து வருகின்றது. இதனால், கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திற்கு தண்ணீர் வரத்து அதிகரித்து மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் பாசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கர்நாடகாவில் உள்ள கே.ஆர்.எஸ் அணை மற்றும் கபினி அணைகளிலிருந்து ஒரு லட்சத்து 25 ஆயிரம் கன அடி உபரிநீர் காவிரியாற்றில் தற்போது வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைகளிலிருந்து வெளியேற்றப்பட்ட நீர் நாளைக்குள் தமிழக எல்லையான பிலிகுண்டுவிற்கு வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஒகேனக்கல் காவிரியாற்றில் வந்துகொண்டிருக்கும் நீரின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
எனவே மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் முழுகொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8 ஆயிரத்து 311 கன அடியாகக் குறைந்துள்ள நிலையில் அணையின் நீர்மட்டம் 117 புள்ளி 50 அடியாக உள்ளது. டெல்டா பாசனத்திற்காக அணையிலிருந்து 22 ஆயிரத்து 500 கன அடி நீரும், 16 கண் மதகுகள் வழியாக 2 ஆயிரத்து 500 கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனிடையே, மத்திய நீர்வளத்துறை ஆணையர் நவீன் குமார் தலைமையில் காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ஜூலையில் தமிழகத்துக்கு 104 டிஎம்சி நீர் காவிரி ஆற்றில் இருந்து திறக்கப்பட்டதாக கர்நாடகா தெரிவித்துள்ளது. காவிரியில் கூடுதல் நீர் திறப்பால் கூட்டத்தில் தண்ணீர் திறப்பு குறித்த விவாதம் நடைபெறவில்லை.