சபரிமலையில் கூடுதலாக 5 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இனி 10 ஆயிரம் பக்தர்கள் தரிசிக்க முடியும். இதற்கான முன்பதிவு உடனடியாக தொடங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டு வரும் 21 ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஐந்து மாத இடைவெளிக்குப் பின் கோயில் நடை திறக்கப்பட்ட நிலையில், நாளொன்றுக்கு 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி தரப்பட்டது. முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே ஐந்து நாட்களுக்கு 25 ஆயிரம் பக்தர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்தனர்.
இதனால், முன்பதிவு கிடைக்காத பக்தர்கள் அதிருப்தியில் இருந்த நிலையில், கூடுதலாக 5 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு முடிவு செய்துள்ளது. 48 மணி நேரத்திற்கு முன்பாக எடுக்கப்பட்ட கொரோனா நெகடிவ் சான்றிதழ் அல்லது இரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ்களை காண்பித்து பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.