உத்தரப்பிரதேச மாநிலத்தில் தொழிலதிபர் சஞ்சீவ் குப்தாவை விடுவிக்க ரூ.100 கோடி கொடுக்க வேண்டும் என்று கடத்தல்காரர்கள் கேட்டுள்ளனர்.
தொழிலதிபர் சஞ்சீவின் செல்போனில் இருந்து பணம் கேட்டு அவரது குடும்பத்தினருக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. அவரது கார் பஞ்சர் கடை ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட நிலையில், அவரது செல்போன் இருக்கும் இடம் டெல்லி முதல் சண்டிகர் வரை காட்டியதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தொழிலதிபர் கடத்தல் தொடர்பான வழக்கினை விசாரிக்கும் சிறப்பு அதிரடிப் படை போலீசார் சண்டிகர் விரைந்துள்ளனர்.
தொழிலதிபர் சஞ்சீவ் குப்தா கடத்தப்பட்டு இரண்டு நாட்களாகியும், அவர் இருக்கும் இடத்தை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. உத்தரப்பிரதேசத்தின் முன்னணி ஹோட்டல் நிறுவனங்களில் ஒன்றான சாகர் ரத்னா நிறுவனங்களில் பங்குதாரராக இருக்கும் சஞ்சீவ் குப்தா, ஞாயிற்றுக்கிழமை கடத்தப்பட்டார். கண்காணிப்பில் இருந்து தப்ப அவரது இருப்பிடத்தை கடத்தல்காரர்கள் அடிக்கடி மாற்றிக்கொண்டிருக்கலாம் என்று போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.