ஜம்மு காஷ்மீரில் குல்காம் மாவட்டத்தில் பனிச்சரிவில் சிக்கி 6 போலீசார் உட்பட10 பேர் மாயமாகியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் சாலைகள் பனிக்கட்டிகளால் மூழ்கியுள்ளன. இந்நிலையில், குல்காம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீநகர் - ஜம்மு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள ஜவஹர் சுரங்கம் அருகே பனிச்சரிவு ஏற்பட்டது. இங்கிருந்த போலீஸ் நிலையமும் இதில் சிக்கியது. இதில் 10 பேர் பனிச்சரிவில் சிக்கிக்கொண்டனர். இதில் 6 பேர் போலீசார் எனவும் 2 பேர் தீயணைப்பு படை வீரர்கள் என்றும் 2 பேர் கைதிகள் என்றும் தெரியவந்துள்ளது. பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால், அவர்களை மீட்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
கடும் பனிப்பொழிவு காரணமாக சாலைகள் தெளிவாக தெரியாததால், ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை 2-வது நாளாக மூடப்பட்டுள்ளது. ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.