இந்தியா

குஜராத்: சாலை விபத்தில் 11 பேர் உயிரிழப்பு: பிரதமர் மோடி இரங்கல்

JustinDurai

குஜராத் மாநிலம் சூரத்தின் வராச்சாவைச் சேர்ந்த சில குடும்பங்கள் பஞ்சமஹால் மாவட்டத்தில் பாவகத், வட்டல் மற்றும் டகோர் கோயில்களைப் பார்க்க மினி லாரி வாடகைக்கு எடுத்துள்ளனர். சுமார் 28 பேரை ஏற்றிச் சென்ற அந்த மினி லாரி இன்று அதிகாலை 2.45 மணியளவில் பின்னால் இருந்து வந்த லாரியுடன் மோதியுள்ளது. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 17 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள எஸ்.எஸ்.ஜி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

 குஜராத் முதல்வர் விஜய் ரூபானி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். 'ஓம் சாந்தி' என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, வடோதராவில் ஏற்பட்ட விபத்தில் நேரிட்ட உயிரிழப்பு குறித்து ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி பகிர்ந்துள்ள ட்விட்டர் பதிவில், “வடோதரா விபத்து குறித்து மிகுந்த வருத்தமுற்றேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுடன் துணை நிற்கிறேன். காயமுற்றவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். அரசு நிர்வாகம் விபத்து ஏற்பட்ட இடத்தில் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது” என்று பதிவிட்டுள்ளார்.