இந்தியா

வாஜ்பாய் குறித்த 10 தகவல்கள் !

வாஜ்பாய் குறித்த 10 தகவல்கள் !

webteam

முன்னாள் பிரதமரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான அடல் பிஹாரி வாஜ்பாய் கடந்த 9 வாரங்களாக சிறுநீரக தொற்று காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே வாஜ்பாயின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 24 மணி நேரத்தில் வாஜ்பாயின் உடல்நிலை மிகுந்த அளவில் மோசமடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்களுடன் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக மருத்துவமனைக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, வாஜ்பாயின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். சுமார் 50 நிமிடங்கள் மருத்துவமனையில் இருந்த பிரதமர், பின்னர் திரும்பினார். இதேபோல வாஜ்பாய் விரைவில் குணமடைய காங்கிரஸ் கட்சியும் வாழ்த்து தெரிவித்து உள்ளது.

இந்நிலையில் வாஜ்பாய் குறித்த 10 விஷயங்களை தெரிந்து கொள்வோம்.

1. மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் பிறந்த வாஜ்பாய், அரசியல் அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றவர். உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள லக்ஷ்மிபாய் கல்லூரியில்தான் அவர் முதுகலை பட்டத்தை முடித்தார்.

2. வாய்பாயின் தந்தைய கிருஷ்ண பிகாரி வாஜ்பாய். பள்ளியில் ஆசிரியராக வேலைபார்த்தவர். இவர், சிறந்த கவிஞரும் கூட. தந்தையை போன்று வாஜ்பாயும் கவிப் புலமை கொண்டவர். தேச பற்று மிகுந்த கவிதைகளை வாஜ்பாய் படைத்துள்ளார்.

3. 'வெள்ளையனே வெளியேறு' இயக்கம் தொடங்கப்பட்டபோதே அவரது அரசியல் பயணம் தொடங்கிவிட்டது.

4.1939-ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் கொள்கையில் ஈர்க்கப்பட்டு அதில் தன்னை  இணைத்துக் கொண்டார்.

5. வாஜ்பாய் பேச்சாற்றல் மிக்கவர். ஒருமுறை வாஜ்பாய் பேச்சை கண்டு முன்னாள் பிரதமர் நேருவே வியந்துபோனார். அப்போது, வாஜ்பாய் வருங்காலத்தில் பிரதமர் ஆவார் என நேரு கணித்திருந்தார்.

6. வாஜ்பாயின் பேச்சு திறமை மற்றும் நிர்வாகத் திறமை ஜன சங்கத்தில் அவர் வளர்ச்சிக்கு முக்கியமானதாக இருந்தது.

7. நெருக்கடி காலத்தில் சிறைக்கு சென்றவர் வாஜ்பாய் (1975-1977)

8. 1996 ஆம் ஆண்டு மிகக் குறுகிய காலம் இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தார். பின்னர் மார்ச் 19-ஆம் தேதி 1998-ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக மீண்டும் பதவி ஏற்றார். 

9. மக்களவை எம்.பியாக 10 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். ராஜ்யசபாவிற்கு இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

10.கடந்த 2014-ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான பாரத ரத்னா விருது வாஜ்பாய்க்கு வழங்கப்பட்டது.