2018-ஆம் ஆண்டில் விவசாயம் சார்ந்த பணிகளில் ஈடுபட்ட 10,349 பேர் தற்கொலை செய்துகொண்டது தேசிய குற்றப்பதிவு ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
2018-ஆம் ஆண்டிற்கான தேசிய குற்றப்பதிவு ஆவணக் காப்பக தரவுகள் தற்போது வெளியாகி உள்ளன. அதில், 2018-ஆம் ஆண்டில் விவசாயம் சார்ந்த பணிகளில் ஈடுபட்ட 10,349 பேர் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 4,586 பேர் விவசாய கூலித் தொழிலாளர்கள். நாடு முழுவதும் 2018-ஆம் ஆண்டு 1,34,516 பேர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் அதில் 7.7 சதவீதம் பேர் விவசாயம் சார்ந்த பணிகளில் ஈடுபட்டிருந்தவர்கள் என தெரியவந்திருக்கிறது.
2017-ஆம் ஆண்டு நாட்டில் ஒட்டுமொத்த தற்கொலைகள் 1,29,887 ஆக இருந்த நிலையில் 2018-ஆம் ஆண்டு அது 1,34,516 ஆக உயர்ந்திருக்கிறது. 2017-ஆம் ஆண்டில், மொத்தம் 10,655 விவசாய பணியாளர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
மேற்கு வங்கம், பீகார், ஒடிசா, உத்தரகாண்ட், மேகாலயா, கோவா, சண்டிகர், டாமன் டையூ, டெல்லி, லட்சத்தீவு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் 2018-ம் ஆண்டில் விவசாயத்துறை சேர்ந்த யாரும் தற்கொலை செய்துகொள்ளவில்லை என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.