பத்தாயிரத்திற்கு மேலான பழங்குடியினர் சத்தீஸ்கர் மாநிலத்தில் இரும்பு சுரங்கத்திற்கு எதிராககூடி போராட்டம் நடத்தியுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் பைலதில்லா மலைப் பகுதியில் இரும்பு சுரங்கம் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்தப் பகுதியில் வசித்து வரும் பழங்குடியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆண்டு இறுதியில் பைலதில்லா மலைப் பகுதியிலுள்ள இரும்பு வளம் எடுக்கும் சுரங்கம் அமைக்க இந்திய அரசு மற்றும் சத்தீஸ்கர் அரசு அதானி குழுமத்திற்கு அனுமதி வழங்கியது. இந்தப் பகுதியில் 326 மீட்டர் பரப்பளவில் இரும்பு வளம் நிறைந்து காணப்படுகிறது.
ஏற்கெனவே இந்தப் பகுதியில் இரண்டு சுரங்க மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் மூன்றாவதாக புதிய சுரங்கம் அமைக்க அரசு முயற்சி எடுத்துவருகிறது. அத்துடன் இந்தப் பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் அதிகளவில் உள்ளதால் போராட்டம் மிகவும் வலுப்பெற்றுள்ளது. மேலும் தற்போது புதிதாக சுரங்கம் அமைக்கப்படுகின்ற பகுதியில் பழங்குடியினரின் தெய்வங்களான பித்தோட் ராணி மற்றும் நந்தராஜ் உள்ளதால் இது போராட்டத்திற்கான முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
இந்தப் போராட்டம் குறித்து தாண்டேவாடா மாவட்ட எஸ்பி அபிஷேக் பல்லவா, “மாவோயிஸ்ட்டுகள் இந்தப் போராட்டத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளனர். அத்துடன் அவர்கள் அங்குள்ள பழங்குடியின மக்களுக்கு போராட்டம் தொடர்பாக அளித்துள்ள துண்டு பிரசுரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்தப் போராட்டத்திற்கு அவர்கள் முறையான அனுமதி பெறவில்லை”எனத் தெரிவித்துள்ளார்.