இந்தியா

கர்நாடக அரசுப் பணிகளில் திருநங்கை உள்பட மாற்றுப் பாலினத்தவருக்கு 1% உள்ஒதுக்கீடு

நிவேதா ஜெகராஜா

கர்நாடகாவில் மாற்றுப்பாலினத்தவர்களுக்கான மாநில வேலைவாய்ப்பு உள்ஒதுக்கீட்டில், ஒவ்வொரு பிரிவிலும் ஒரு சதவிகித பணிவாய்ப்பு ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேரடி பணி நியமனங்கள் அனைத்திலும், இந்த விதி அமல்படுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த உள்ஒதுக்கீடு அதிகரிப்பு, பொதுப்பிரிவின் கீழ் வருபவர்கள், எஸ்.சி., எஸ்.டி பிரிவை சேர்ந்தவர்கள், இதர பின்தங்கிய வகுப்பை சேர்ந்தவர்கள் என அனைத்து பிரிவினை சேர்ந்தவருக்கும் பொருந்துமென கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு 2019-ம் ஆண்டில் ஏற்படுத்திய திருநங்கைகளுக்கான சட்டத்தின்கீழ், கர்நாடக அரசு திருநங்கைகளை வகைப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தில், திருநங்கை என்பவர் பிறப்பு சான்றிதழுடன் ஒத்துப்போகமாட்டார்; திருநங்கையாகவோ திருநம்பியாகவோ, க்யூர் ஜெண்டரை சேர்ந்தவராகவோ, இருபாலின தன்மையும் கொண்டவாரகவோ அல்லது கின்னர் - ஹிஜ்ரா - அரவாணி - ஜோக்தா போன்ற சமூக கலாசார அடையாளங்களை கொண்டவராகவோ இருப்பர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

1977-ல், கர்நாடக அரசு பணியிடங்களுக்காக ஏற்படுத்தப்பட்ட விதிகளில் 9 வது விதியை திருத்தம் செய்ததன் வழியாக, இந்த உள்ஒதுக்கீடு திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பணிக்கு விண்ணப்பிக்கும்போதே, மாற்றுப் பாலினத்தவரை அறியவேண்டி கர்நாடக அரசு வேலைக்கான விண்ணப்பத்தில், ஆண் - பெண் ஆகிய பாலினங்களோடு சேர்த்து 'இதரர்' என்ற புதிய பகுதியை இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த மாதத்தில் கர்நாடக அரசு இதுதொடர்பான வரைவு அறிக்கையை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சமர்பித்திருந்தது. சங்கமா என்ற மாற்றுப் பாலின சமூகத்தினருக்கான தன்னார்வ அமைப்பும், தன்னார்வலர் நிஷாவும் தொடர்ந்திருந்த பொதுநல வழக்கு விசாரணையின்போது இந்த அறிக்கையை கர்நாடக அரசு வெளியிட்டிருந்தது. பின்னர், இந்த அறிக்கையின் நகல், தலைமை நீதிபதி அபய் ஷ்ரீனிவாஸ் மற்றும் நீதிபதி சூரஜ் கோவிந்தராஜ் அமர்வில் சமர்பிக்கப்பட்டது.

ஒருவேளை பணியிட தேர்வின்போது, குறிப்பிட்ட ஏதேனுமொரு பிரிவில் போதுமான அளவு மாற்றுப் பாலினத்தவர் இல்லாத சூழல் ஏற்பட்டால், அந்த இடத்தில் ஆண் அல்லது பெண் பாலினத்தை சேர்ந்தவர்களே நியமிக்கப்படுவர் என திருத்த விதியில் கூறப்பட்டுள்ளது.