இந்தியா

’கறுப்பாக இருக்கிறாய்’... கோயிலுக்குள் நுழைய முயன்ற பெண்ணை வெளியில் துரத்திய அறங்காவலர்!

webteam

கர்நாடகாவில் கோயிலுக்குள் நுழைய முயன்ற பெண்ணை, தடுத்து வெளியில் இழுத்துவந்து விடும் வீடியோ காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு அமிர்தஹள்ளி என்ற பகுதியில் புகழ்பெற்ற நரசிம்ம சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு பெண் ஒருவர் சாமி கும்பிடச் சென்றுள்ளார். ஆனால், அவரை உள்ளே விடாமல், அவரது தலைமுடியை இழுத்துப் பிடித்தபடி வாசலில் கொண்டுபோய் விடுகிறார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அந்தப் புகாரில், ‘அறங்காவலர்களில் ஒருவரான முனிகிருஷ்ணப்பா என்பவர், தன்னைக் குளிக்காமல் கோயிலுக்குள் வரக்கூடாது. நீ கறுப்பாக இருக்கிறாய். அதனால் உன்னைக் கோயிலுக்குள் அனுமதிக்க முடியாது’ என்று கூறியிருக்கிறார். மேலும் அவர், அந்த அறங்காவலர் தன்னைக் கடுமையாகத் திட்டியதுடன், இரும்புத் தடி கொண்டு தாக்கவும் முயன்றார். இதைக் கண்ட பூசாரிகள் அவரைத் தடுக்க முயன்றனர். இதுபற்றி வெளியே கூறினால், தன்னையும், தன் கணவரையும் கொலை செய்துவிடுவேன்’ என மிரட்டியதாகவும் புகாரில் தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அறங்காவலர் முனிகிருஷ்ணப்பா தரப்பிலும் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர் அளித்துள்ள புகாரில், ”அந்தப் பெண், கோயில் கருவறைக்குள் அத்துமீறி நுழைய முயன்றார். ’என் மீது சாமி வந்துள்ளது. வெங்கடேஸ்வரா எனது கணவர். ஆகையால், கோயில் கருவறையில் உள்ள வெங்கடேஸ்வரா அருகே நான் அமர வேண்டும். ஆகவே என்னை உள்ளே விடுங்கள்’ என அவர் வற்புறுத்தினார். அதைக் கேட்ட பூசாரிகள் அவரை உள்ளே விடவில்லை. இதனால்தான் அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். இதன் காரணமாக ஆத்திரமடைந்த அவர், பூசாரிகளில் ஒருவர் மீது எச்சிலைத் துப்பினார்.

என்றாலும், நாங்கள் அதைப் பொறுத்துக் கொண்டு அவரைப் பலமுறை வெளியே செல்லும்படி பணிவாகக் கேட்டுக்கொண்டோம். ஆனால், அவர் அதைக் கேட்கவில்லை. அதனால்தான், நாங்கள் அந்தப் பெண்ணை கட்டாயப்படுத்தி இழுத்து வெளியே விடவேண்டிய நிலை ஏற்பட்டது” என தெரிவித்து உள்ளார். இருதரப்பு புகாரையும் பெற்றுக்கொண்ட போலீஸார், தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். இதுதொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

- ஜெ.பிரகாஷ்