அனைத்துக் கட்சி கூட்டத்தில் வாக்கு இயந்திரம் தொடர்பாக பேசியிருந்தால் நான் பங்கேற்றிருப்பேன் என பகுஜன் சமாஜ்வாதி கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’, மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் மற்றும் 2022ஆம் ஆண்டில் கொண்டாடப்படவுள்ள 75வது சுதந்திர தினம் ஆகியவை குறித்து ஆலோசனை நடத்த அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில் கூட்டத்தில் தான் பங்கேற்கவில்லை என மாயாவதி தெரிவித்துள்ளார். ‘வறுமை, வேலையின்மை, பணவீக்கம், அதிகரித்து வரும் வன்முறை குறித்து ஆலோசனை நடத்த அனைத்துக் கட்சிகள் கூட்டத்தை கூட்டியிருந்தால் நான் பங்கேற்றிருப்பேன்.
ஆனால் இவர் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற பயனில்லாத விவகாரத்திற்கு அனைத்துக் கட்சிகளை கூட்டியதால்தான் நான் பங்கேற்கவில்லை. இதுதவிர தேர்தல் இயந்திரம் குறித்து விவாதிக்க அழைத்திருந்தாலும் நான் பங்கேற்றிருப்பேன். தேர்தலை வாக்குச் சீட்டு முறையில் நடத்தாமல், வாக்கு இயந்திரம் மூலம் மட்டும் தான் நடத்துவோம் என அடம்பிடிப்பது ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலான ஒன்றாகும்” எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.