எங்களுடன் விளையாடுங்கள் என்று இந்தியா உள்ளிட்ட எந்த நாட்டிடமும் கெஞ்சிக் கொண்டு இருக்க முடியாது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
2013-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் நேரடியாக இருதரப்பு போட்டிகளில் பங்கேற்கவில்லை. எனினும், சர்வதேச தொடர்களில் இரு அணிகளும் அவ்வப்போது மோதியுள்ளன. உலகக் கோப்பை தொடரில் இதுவரை இந்தியா மற்றும் பாகிஸ்தான் 6 போட்டிகளிலும், டி20 உலகக் கோப்பையில் 5 போட்டிகளிலும் மோதியுள்ளன.
எல்லை ரீதியில் இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் நிலவி வருவதால் இரு நாடுகளுக்கும் இடையே நடக்கும் போட்டியை, ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துள்ளனர். தற்போதைய உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்க உள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் இஷன் மணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “எங்களுடன் கிரிக்கெட் விளையாடுங்கள் என இந்தியா உள்பட எந்த ஒரு நாட்டுடனும் கெஞ்சிக்கொண்டு இருக்க முடியாது. கண்ணியமான முறையில், இந்தியாவுடனான இரு தரப்பு கிரிக்கெட் உறவுகள் மீண்டும் நடைபெற வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம்.
இந்த ஆண்டு நவம்பர் மாதம் பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் ஐசிசி சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாட உள்ளது. இதற்கு பின் இரு நாடுகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் தொடர்ந்து நடைபெறும் என நம்புகிறேன்.” என்றார்.