அரசியலில் இருந்து எப்போது விலகப் போகிறீர்கள் என்ற கேள்வியுடன் சித்துவுக்கு எதிராக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் பஞ்சாப்பில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, பஞ்சாப் மாநில அமைச்சராக இருக்கிறார். இவருக்கும் மாநில முதலமைச்சர் அமரீந்தர் சிங்குக் கும் கடும் மோதல் எழுந்துள்ளது. இதனால் அவர் வகித்து வந்த இலாகா பறிக்கப்பட்டு, வேறு இலாகா கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக சமீபத் தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார் சித்து.
இவர் கடந்த மக்களவைத் தேர்தலின் போது, காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பல்வேறு இடங்களில் பேசினார். அப்போது, ராகுல் காந்தி அமேதியில் தோற்றால், நான் அரசியலை விட்டே விலகிவிடுகிறேன் என்று கூறியிருந்தார். ஆனால், அமேதியில் பாஜகவின் ஸ்மிருதி இரானி யிடம் 55 ஆயிரத்து 120 வாக்கு வித்தியாசத்தில் தோற்றார், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
இதனால் வாக்குத் தவறாமல், சொன்னது போல அரசியலில் இருந்து விலகுங்கள் என்று சித்துவுக்கு எதிராக பாஜகவினர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் லூதியானாவில் பகோவால் சாலையில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் இன்று பரபரப்பு போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அதில், சித்துவுக்கு எதிராக,’’எப்போது அரசியலில் இருந்து விலகப் போகிறீர்கள்? சொன்ன வாக்கைக் காப்பாற்றுங்கள். நாங்கள் உங்கள் ராஜினாமாவை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்’’ என்று எழுதப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.