போரும் அமைதியும் புத்தகம் வைத்திருப்பதற்கான காரணத்தை மும்பை உயர்நீதிமன்றம் கேட்பது உண்மையில் விநோதமாக உள்ளது என்று காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
பிமா கொரேகான் (Bhima koreagaon) யுத்தத்தின் 200ஆவது ஆண்டைக் குறிக்கும் வகையில் 2018ம் ஆண்டு ஜனவரில் நடைபெற்ற நிகழ்வில் வன்முறை ஏற்பட்டது. இந்த எல்கர் பரிஷத் - பிமா கொரேகான் சம்பவம் தொடர்பாக சமூக செயற்பாட்டாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர். கோன் சால்வே உள்ளிட்டோர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது மும்பை உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணை நடைபெற்றது.
கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளில் இருந்து கைப்பற்றப்பட்ட ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் எழுதிய போரும் அமைதியும் நாவல் மற்றும் சில சிடிக்கள் குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினர். போரும் அமைதியும் புத்தகம் வைத்திருந்ததற்கான காரணத்தை நீதிபதி கேட்டுள்ளார்.
இந்நிலையில், போரும் அமைதியும் புத்தகம் வைத்திருப்பதற்கான காரணத்தை நீதிமன்றம் கேட்பது உண்மையில் விநோதமாக உள்ளதாக ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். இதுகுறித்து ஜெய்ராம் ரமேஷ் தன்னுடைய ட்விட்டரில், “போரும் அமைதியும் புத்தகத்தை ஏன் வைத்திருக்கிறீர்கள் என மும்பை உயர்நீதிமன்றம் ஒருவரிடம் கேட்டுள்ளது உண்மையில் விநோதமாக உள்ளது. அது ஒருகிளாசிக் புத்தகம். அதுமட்டுமல்லாமல் மகாத்மா காந்திக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் டால்ஸ்டாய். புதிய இந்தியாவுக்கு வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
“இது உண்மையில் வினோதமான செய்தி. இந்தியாவில் ஆயிரக்கணக்கான இலக்கிய மாணவர்கள், பேராசிரியர்கள், வாசகர்கள், எழுத்தாளர்களை மும்பை உயர் நீதிமன்றம் என்ன செய்யப் போகிறது என நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. இது அபத்தமானது” என காங்கிரஸ் கட்சியும் நீதிமன்றம் எழுப்பிய கேள்வி குறித்து பதிவிட்டுள்ளது.