மகாராஷ்டிரா அரசாங்கத்திற்கு எதிராக மக்களவையில் பேசியதற்காக சிறையில் அடைக்கப்படுவீர்கள் என எச்சரித்ததாக சிவசேனாவின் எம்.பி அரவிந்த் சாவந்த் மீது அமராவதியின் சுயேச்சை எம்.பி. நவ்னீத் கவுர் ராணா குற்றம்சாட்டியுள்ளார்.
இதைவிடக் கடுமையான குற்றச்சாட்டு என்னவென்றால், தொலைபேசி அழைப்புகள் மற்றும் கடிதங்கள் மூலமாக அச்சுறுத்தல்கள் வருவதாகவும், தன் மீது ஆசிட் தாக்குதல் நடத்துவதாக அச்சுறுத்தியதாகவும் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் மூலமாக தெரிவித்துள்ளார் நவ்னீத் கவுர். ஆனால், சிவசேனாவின் சிந்துதுர்க் மக்களவை உறுப்பினர் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். அதற்கு பதிலாக, உடல்ரீதியான தீங்கு விளைவிப்பதாக யாராவது மிரட்டினால் பெண் உறுப்பினருக்கு நான் துணையாக நிற்பேன்" என்று கூறினார்.
மார்ச் 22-ஆம் தேதியிட்ட இந்தக் கடிதத்தில், ராணா, "இன்று, சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த் சாவந்த் என்னை அச்சுறுத்திய விதம், இது எனக்கு மட்டுமல்ல, நாட்டின் அனைத்து பெண்களுக்கும் ஒரு அவமானம். எனவே நான் இதற்கு எதிராக கடுமையான போலீஸ் நடவடிக்கையை நாடுகிறேன்” எனத் தெரிவித்தார். மகாராஷ்டிரா அரசாங்கத்தில் விவகாரங்கள் தொடர்பான பிரச்னையை எழுப்பியதில் சாவந்த் கோபமடைந்ததாக அவரது கடிதம் கூறுகிறது.
மக்களவையில் பேசிய நவ்னீத் கவுர் ராணா, "மும்பை முன்னாள் போலீஸ் கமிஷ்னர் பரம் பிர் சிங்கின் ஊழல் குற்றச்சாட்டுகளை அடுத்து, முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா அரசு பதவி விலக வேண்டும்" என்றும் அவர் கோரியிருந்தார்.