இந்தியா

’இது ஒன்றும் பாலஸ்தீனமல்ல’: காஷ்மீர் நெடுஞ்சாலை தடைக்கு கடும் எதிர்ப்பு

’இது ஒன்றும் பாலஸ்தீனமல்ல’: காஷ்மீர் நெடுஞ்சாலை தடைக்கு கடும் எதிர்ப்பு

webteam

காஷ்மீரில் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில், வாரத்தில் இரண்டு நாட்கள் பொதுமக்கள் பயன்பாட்டுத் தடைவிதிக்கும் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளன.

கடந்த பிப்ரவரி மாதம் காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் சென்ற வாகனங்கள் மீது நடந்த பயங்கரவாத தாக்குதலில், 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படையினர் செல்லும் வழியில், அவர்களை பயங்கரவாதிகள் மீண்டும் தாக்கக் கூடும் என்பதால், வீரர்களின் பாதுகாப்பான பயணத்துக்காக, ஜம்மு - ஸ்ரீநகர் - பாரமுலா நெடுஞ்சாலையில் வாரம் இரண்டு நாட்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது.  

இந்த தடை நேற்று முதல் அமலுக்கு வந்தது. அதன்படி, ஞாயிறு மற்றும் புதன்கிழமைகளில் இந்த நெடுஞ்சாலையில் பொதுமக்களின் வாகனங்கள் செல்லக் கூடாது, பாதுகாப்புப் படை வாகனங்கள் மட்டுமே செல்லும் என்பதால், நுாற்றுக்கணக்கான வாகனங்கள் நேற்றுமுன் தினம் இரவு முதல் காத்திருந்தன. இதற்கு காஷ்மீர் அரசியல் கட்சிகள், தங்கள் வேறுபாட்டை மறந்து கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 

காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முஃப்தி கூறும்போது, ‘’பொதுமக்கள் இந்த தடையை ஏற்கக் கூடாது. தடையை மீறி, தங்கள் விருப்பம் போல் எங்கு செல்ல வேண்டுமோ அங்கு சென்று வர வேண்டும். இதை தடையை நீதிமன்றம் மூலம் தகர்த்தெறிவோம். இது காஷ்மீர், பாலஸ்தீனம் அல்ல. எங்கள் நிலத்தை திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்ற அனுமதிக்க மாட்டோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

பாஜக கூட்டணியில் இருந்த மக்கள் மாநாட்டுக் கட்சி தலைவர் சஜ்ஜத் லோன் கூறும்போது, ‘’இந்த தடை, மனிதாபிமானத்துக்கான பேரழிவு. மனிதாபிமானமற்ற இந்த தடையை, ஆளுநர் உடனடியாக வாபஸ் பெற வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார். மேலும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் உமர் அப்துல்லா உட்பட பலர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.