மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை பரிந்துரைத்த முறைக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்பி-யுமான அகமத் படேல் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவும், சிவசேனாவும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் இக்கூட்டணி வென்றபோதிலும், ஆட்சி அதிகார பகிர்வில் இரு கட்சிகள் இடையே உடன்பாடு எட்டப்படவில்லை. இரண்டரை ஆண்டுகளுக்கு முதல்வர் பதவி மற்றும் ஆட்சியில் சமபங்கு என பாஜகவிடம் சிவசேனா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இதற்கிடையே தேர்தல் முடிவுகள் வெளியாகி 20 நாட்கள் ஆகியும், எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்கத் தேவையான உறுப்பினர்களின் ஆதரவுக் கடிதத்தை ஆளுநரிடம் அளிக்கவில்லை.
இந்த நிலையில், எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத சூழல் நிலவுவதால், மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துமாறு அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைத்தார். அதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து மகாராஷ்டிரவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது. 20 நாட்களாக உச்சக்கட்ட குழப்பம் நீடித்து வந்த நிலையில், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் அகமத் படேல் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அகமத் படேல், “குடியரசுத் தலைவர் ஆட்சியை பரிந்துரைத்த விதத்தை நான் கண்டிக்கின்றேன். இந்த மத்திய அரசு கடந்த 5 வருடங்களில் பல இடங்களில் உச்சநீதிமன்றம் வழிகாட்டியுள்ள குடியரசுத் தலைவர் விதிமுறைகளை மீறியுள்ளது” என்று தெரிவித்தார்.