கடந்த 20 வருடங்களாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வரும் முக்கிய வழக்குகள் பெரும்பாலும் ஜூனியர் நீதிபதிகள் தலைமையில் உள்ள அமர்வுக்கே மாற்றப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
குறிப்பாக ராஜூவ் காந்தி கொலை வழக்கு, பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக எல்.கே அத்வானி மீது தொடரப்பட்ட வழக்கு, சோராபுத்தீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கு, குஜராத் கலவரத்தின் போது டெல்லி ‘பெஸ்ட் பேக்கரி’ எரிக்கப்பட்ட வழக்கு, கிடப்பில் போடப்பட்ட பல ஊழல் வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழக்குகள் ஜூனியர் நீதிபதி தலைமையிலான அமர்வில் தான் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த அமர்வு முடிவுகள் அனைத்தையும், கடந்த 20 வருடங்களாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர்கள் தான் தேர்வு செய்துள்ளனர். மூத்த நீதிபதிகள் பலர் அமர்வில் இருந்தாலும், ஜூனியர் நீதிபதிகளே தலைமையாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தான், இந்திய வரலாற்றில் முதல்முறையாக, உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய் உள்ளிட்ட 4 பேர் கடந்த 12ம் தேதி திடீரென செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது, நான்கு மூத்த நீதிபதிகளும் அதிருப்தி தெரிவித்தனர்.
முக்கிய வழக்குகளை மூத்த நீதிபதிகளின் அமர்வுக்கு ஒதுக்காமல், தனக்கு வேண்டிய சில நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு தலைமை நீதிபதி ஒதுக்கீடு செய்வதாகவும் அவர்கள் புகார் தெரிவித்தனர். இந்த விவகாரம் இந்திய அளவிலான சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகளான சாவந்த், சந்துரு, ஏபி ஷா, சுரேஷ் ஆகியோர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஷ்ராவுக்கு நேற்று கடிதம் ஒன்றை எழுதியிருந்தனர். அதில், புதிய விதிமுறைகள் வகுக்கும் வரை முக்கிய வழக்குகளை மூத்த நீதிபதிகள் அமர்வுக்கு வழங்க வேண்டும் எனவும், ஒருசில நீதிபதிகளுக்கு மட்டுமே முக்கிய வழக்குகளை ஒப்படைக்கக் கூடாது எனவும் வலியுறுத்தியிருந்தனர்.