இந்தியா

நீதிபதிகள் நியமன விவகாரம்: புதிய பரிந்துரைக்கு தமிழக வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு

Veeramani

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களை உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளாக நியமிக்கலாம் எனும் பரிந்துரைக்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. காரணம் என்ன? பார்க்கலாம்.!

ஒரு உயர்நீதிமன்றத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கறிஞராக இருப்பவரும், அந்த உயர்நீதிமன்ற அதிகாரவரம்பிற்கு உட்பட்ட மாவட்ட நீதிபதிகளுமே, உயர் நீதிமன்றங்களில் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்படும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. பின்னர் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் அவர்கள் நிரந்தர நீதிபதிகளாக்கப்படுவர். ஆனால் உச்சநீதிமன்ற கொலீஜியத்திற்கு, உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் புதிய பரிந்துரை ஒன்றை அனுப்பியிருக்கிறது. அதில், உச்சநீதிமன்றங்களில் வழக்கறிஞர்களாக பணிபுரிபவர்களை, உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.

இப்பரிந்துரைக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், தமிழக வழக்கறிஞர்களும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களை விட உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் திறமையானவர்கள் என முன்வைக்கப்பட்டிருக்கும் கருத்துக்கு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் மாநில நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளாக வரும்போது, அங்குள்ள வழக்கறிஞர்களின் வாய்ப்பு பறிக்கப்படுவது மட்டுமல்லாமல், மொழிப் பிரச்சினைக்கும், ஒருமைப்பாடு சிதைவுக்கும் வழிவகுக்கும் எனவும் கவலை தெரிவிக்கப்படுகிறது.

நீதிபதிகள் காலிப் பணியிடங்களை நிரப்பும் நோக்கில் எடுக்கப்படும் நடவடிக்கைகள், அந்தந்த மாநிலத்தை சார்ந்தவர்களின் உரிமைகளை பறிக்கக்கூடாது என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.