ப.சிதம்பரம் வெளிநாட்டிலுள்ள சொத்து விவரங்களை தெரிவிக்காததால் அவர் மீது வருமானவரித்துறை நடவடிக்கை எடுத்திருப்பதாக நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ள நிலையில், அவருக்கு பதிலளிக்கும் வகையில் சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
டெல்லியில் செய்தியாளார்களிடம் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் கட்சியின் தலைவரே சில சர்ச்சைக்குரிய நிதி பரிவர்த்தனைகளில் சிக்கி தற்போது பிணையில் வெளியில் உள்ளனர். எனவே காங்கிரஸ் கட்சியின் மூத்த முன்னாள் அமைச்சர் மீது முன்வைக்கப்படும் புகார்கள் குறித்து ராகுல் கருத்து சொல்லவேண்டும் என்றார். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்துவாரா என்பதை நாட்டு மக்களுக்கு அவர் தெளிவுபடுத்த வேண்டும் என்றார். பாகிஸ்தானில் நவாஸ் ஷெரிப் வெளிநாட்டு சொத்து விவரங்களை தெரிவிக்காததற்காக தேர்தலில் போட்டியிட தடைவிதிக்கப்பட்டதை குறிப்பிட்ட நிர்மலா, காங்கிரஸ் கட்சி அதே போன்றதொரு நிலையை எதிர்கொண்டிருப்பதாகக் கூறி இருந்தார்.
இந்நிலையில் சீதாராமன் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், நிர்மலா சீதாராமன் பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு வருமானவரித்துறைக்கு வழக்கறிஞராக நியமிக்கப்படவுள்ளதாக டெல்லி வட்டாரங்களில் பேச்சு அடிபடுவதாக நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார். நாட்டில் அதிக செல்வமுள்ள கட்சியின் தலைவர் பல பில்லியன் டாலர்கள் குறித்து கனவு காணுவதாக விமர்சித்துள்ள சிதம்பரம், கருப்பு பணத்தை திரும்ப கொண்டு வந்து தேர்தலில் வாக்களித்தபடி ஒவ்வொரு இந்தியனின் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.