இந்தியா

“200 மார்க் கொடுத்தார் சித்து” – ‘திருமணம்’ ஷ்ரேயா ஓப்பன் டாக்!

“200 மார்க் கொடுத்தார் சித்து” – ‘திருமணம்’ ஷ்ரேயா ஓப்பன் டாக்!

sharpana

 ’திருமணம்’ சீரியல் மூலம் பெண்களது  மனங்களை மட்டுமல்ல ஆண்களின் இதயங்களையும் ஈர்த்துக்கொண்டிருப்பவர் நடிகை ஷ்ரேயா அஞ்சான். கொரோனா தொற்றச்சத்தால் தடைப்பட்டிருந்த சின்னத்திரை ஷூட்டிங்குகள் தற்போது துவங்கியுள்ள நிலையில், வரும் திங்கள் கிழமையிலிருந்து கலர்ஸ் தமிழ் சேனலில் திருமணம் சீரியல் மீண்டும் ஒளிபரப்பாகவுள்ளது. பிஸியாக நடித்துக்கொண்டிருந்த ஷ்ரேயாவிடம் கொரோனா ஷாட் பிரேக்கில் பேசினோம். அழகுத் தமிழில் உற்சாகமுடன் பேசுகிறார்.

’திருமணம்’ மீண்டும் ஒளிபரப்பாகவிருப்பது எப்படி இருக்கிறது?

சீரியல் யூனிட் எப்போதும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும். அதனால், ஊரடங்கு ஆரம்பித்த புதிதில் கொஞ்சம் ரிலாக்ஸாக இருந்தது. ஆனால், பிறகு அதுவே போர் அடிக்க ஆரம்பித்துவிட்டது. எவ்வளவு நேரம்தான் படங்களையே பார்த்துகொண்டிருப்பது? எப்போது, ஷூட்டிங் ஆரம்பிப்பார்கள் என்று ஏக்கமே வந்துவிட்டது. நிறைய ஃபேன்ஸ் போன் செய்து ‘சீரியலை மிஸ் பண்றோம். திருமணம் தாமதமாக வந்தாலும் பரவாயில்லை. ஆனால், உங்கள் பாதுகாப்பு முக்கியம்’ என்று கூறியது நெகிழ்ச்சியாக இருந்தது. அவர்களை மீண்டும் சந்திக்கவிருப்பது இன்னும் சந்தோஷத்தைக் கொடுக்கிறது.

ஆனால், ஷூட்டிங்கில் நடிகர், நடிகைகள் அருகருகில் நடிக்கவேண்டி இருக்குமே? சமூக இடைவெளியை எப்படி கடைபிடிக்கிறீர்கள்?

எல்லோருமே சானிடைசர், மாஸ்க் பயன்படுத்தி பாதுகாப்பாக பணிகளை தொடருகிறோம். ஆனால், நடிகர்களுக்குத்தான் கொஞ்சம் கடினம். அடிக்கடி உடை மாற்றவேண்டும். அதுவும் பழகிவிட்டது. மேலும், தற்போது கதைப்படி நான் அம்மா வீட்டுக்கு வந்துவிடுவேன். அதனால், பிரச்சனை இல்லை. இயக்குநர் எங்கள் பாதுகாப்பில் மிகவும் கண்டிப்பானவர். நானும் என் பக்கத்தில் யாராவது மாஸ்க் போடாமல் வந்தால் மாஸ்க் போடச்சொல்வேன்.

ஊரடங்கு எப்படிச் சென்றது? கற்றுக்கொண்டது என்ன?

கொரோனாவால் எனது சொந்த ஊரான மங்களூருக்குச் செல்லலாம் என்று நினைத்தபோது எனக்கு இ-பாஸ் கிடைக்கவில்லை. அதனால், சென்னையிலேயே தங்கும் சூழல் ஏற்பட்டுவிட்டது. கடைசியாக டிசம்பரில்தான் ஊருக்குச் சென்று வந்தேன். எனது சகோதரியின் பிறந்தநாளுக்கு ஒவ்வொரு வருடமும் சென்றுவிடுவேன். ஆனால், கொரோனா இந்தவருடம் தடுத்துவிட்டது. கொரோனாவால் வெளியில் சாப்பிட முடியாது என்பதால், உருப்படியாக சமையல் கற்றுக்கொண்டேன். நான் மீன் அதிகம் விரும்பி சாப்பிடுவேன். அம்மாவிடம் கேட்டு வெரைட்டியாக மீன் குழம்பு, இறால் ஃப்ரை, நண்டு கிரேவி போன்றவற்றை செய்யக் கற்றுக்கொண்டேன். ஆனால், நான் அம்மாவுடன் இருக்கும்போது ஒருவேலையும் செய்ததில்லை. ’இங்க இருக்கும்போது நீ சமைச்சதே இல்லை. வீட்டுக்கு வந்ததும் ஒழுங்கா எனக்கு சமைத்துக்கொடுக்கணும்’ என்றார் அம்மா. ஒருநாள் சமைத்துவிட்டு சித்துவை வீட்டிற்கு சாப்பிட அழைத்தேன். அதிர்ச்சியானவர் ’நீங்களா சமைச்சீங்க?’ என்று கேட்டு ரசித்து சாப்பிட்டார். அவருக்கு பிரியாணி பிடிக்கும் என்பதால், மற்றொரு நாள் ஷூட்டிங்கின்போது பிரியாணி செய்து எடுத்துக்கொண்டு கொடுத்தேன் ‘ரொம்ப நல்லாருக்கு’ என்றவர் ‘உங்களுக்கு சமையலில் 100 மதிப்பெண்கள் இல்லை; 200’ என்று பாராட்டித் தள்ளினார்.  

திருமணம் சீரியலில் ரொம்ப அமைதியாக இருக்கீங்களே? நிஜ ஜனனி எப்படி?

நிஜத்திலும் நான் அப்படித்தான். யார் என்னை திட்டினாலும் அவமானப்படுத்தினாலும் உடனே ரியாக்ட் பண்ணமாட்டேன். ஆனால், ரொம்ப ஜாலியான பொண்ணு. யாரையாவது பிடித்துவிட்டால் உடனே நட்பாகிவிடுவேன்.

சென்னையில் பிடித்த இடம்?

மெரினா பீச், வி.ஆர் மால், ஃபீனிக்ஸ் மால் போன்ற இடங்களுக்கு அடிக்கடி செல்வேன்.

சினிமாவில் உங்களுக்குப் பிடித்த காதல் ஜோடி?

சூர்யா ஜோதிகா, அஜித் ஷாலினி இரண்டு ஜோடிகளும் அழகாக இருப்பார்கள். அவர்களைப் பார்த்தாலே சந்தோஷமாக இருக்கும்.

சீரியலில் பெண்கள் அழுதுகொண்டே இருக்கிறார்களே? வருத்தப்பட்டிருக்கிறீர்களா?

சீரியலிலும் அடிக்கடி இயக்குநர்கள் மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். சிலர் அழுகை அதிகமாக வைக்கிறார்கள். சிலர் வைப்பதில்லை. ஆனால், எனக்கு அழுகை வைப்பது பிடிக்காது. இயக்குநரிடம் ‘சார் அடிக்கடி அழுகை வேண்டாம். உறுதியாக இருக்கும்படியும் வைக்கலாமே’ என்பேன்.

ஹெல்த் சீக்ரெட்?

மங்களூர் கேரளா எல்லையில்தான்  உள்ளது. கேரளாவின் அனைத்து கலாச்சாரமும் உணவும் இங்கும் அப்படியே பின்பற்றப்படுகிறது.  ‘நீங்க கேரளாவா?’ என்று பலர் என்னிடம் கேட்பார்கள். அப்படி கேட்பதில் எனக்கு சந்தோஷம்தான். ஆனால், தொடர்ச்சியாக உடற்பயிற்சிகள் செய்வதில்லை. நேரம் கிடைக்கும்போது செய்வேன். என் ஹெல்த் சீக்ரெட் வீட்டுச் சாப்பாடுதான். ஆனால், சென்னை வந்து ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிட்டு உடம்பு கெட்டுவிட்டது. கொரோனா மீண்டும் வீட்டுச் சாப்பாடு சாப்பிட வைத்துவிட்டது.

ஏன் மீண்டும் சினிமாவில் நடிப்பதில்லை?

மீண்டும் கன்னட படங்களில் நடிக்க அழைப்புகள் வருகின்றன. ஆனால், திருமணம் சீரியலில் இன்வால்வ் ஆக நடிக்க ஆரம்பித்துவிட்டேன். அதனால், ஒத்துக்கொள்ளவில்லை.

’திருமணம்’ சீரியல் ஹீரோ சித்துவும் நீங்களும் காதலிப்பதாக சொல்கிறார்களே? எப்போது திருமணம்?

சித்து கருணை உள்ளம் கொண்டவர். எல்லோருக்கும் ஓடிஓடி உதவுவார். எனக்கு சென்னையில் அதிகம் நண்பர்கள் இல்லை. ஆனால், அவர் எனக்கு நிறைய விஷயத்தில் பெரிய பலமாக இருக்கிறார். நான் சோகமாக இருந்தாலும் எப்படியாவது சிரிக்க வைத்துவிடுவார். எங்களிடம் நல்ல அன்பும் நட்பும் உள்ளது. திருமணம் குறித்தெல்லாம் இன்னும் யோசிக்கவில்லை. ஆனால், ரசிகர்கள் எங்களை ஒன்றாக பார்க்க ஆசைப்படுகிறார்கள். ஆனால், எங்களுக்கு அந்தமாதிரி எண்ணம் எதுவும் இல்லை. அப்படி இருந்தால் கண்டிப்பாக சொல்வோம்.