இந்தியா

“இணையதள பயன்பாடு தனிமனித சுதந்திரம்” - கல்லூரி மாணவி வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு 

webteam

இணையதள சேவையை பயன்படுத்துவது அடிப்படை உரிமை என்று கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 

கேரளாவை சேர்ந்த கல்லூரி மாணவி ஃபஹீமா சிரீன். இவர் ஒரு கல்லூரியில் பிஏ பட்டப்படிப்பை பயின்று வருகிறார். இவர் கல்லூரியின் விடுதியில் தங்கி இருந்தார். விடுதியில் தினமும் இரவு 6 மணி முதல் 10 மணி வரை கைப்பேசி பயன்படுத்தக் கூடாது என்ற விதி உள்ளது. இதற்கு மாறாக ஃபஹீமா சிரீன் கைப்பேசியை பயன்படுத்தியிருந்தார். எனவே இவரைக் கல்லூரி நிர்வாகம் விடுதியிலிருந்து நீக்கியது. 

இதனைத் தொடர்ந்து ஃபஹீமா சிரீன் கேரளா உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார். இந்த மனுவில், “கைப்பேசியை பயன்படுத்த விடாமல் தடை விதித்தது எங்களின் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் விதத்தில் உள்ளது. இது அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 19(1)(ஏ)படி உள்ள கருத்து சுதந்திர அடிப்படை உரிமையை பறிக்கும் செயல். மேலும் கைப்பேசி மூலம் இணையதள சேவையை பயன்படுத்துவதன் மூலம் மாணவர்கள் தங்களின் அறிவை வளர்த்து கொள்ளவும் தங்களின் கருத்துகளை தெரிவிக்கவும் உதவும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

அத்துடன் இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஐநாவின் மனித உரிமைகள் ஆணையம் கடந்த 2016ஆம் ஆண்டு இணையதள சேவை பயன்பாட்டை அடிப்படை மனித உரிமையாக அறிவித்ததை சுட்டிக் காட்டினார். இந்த வாதங்களை கேட்ட நீதிபதி ஆஷா, “உச்சநீதிமன்றத்தின் விசாகா தீர்ப்பில் ஐநாவின் அமைப்புகள் கொண்டு வரும் உரிமைகள் இந்திய சட்டத்தில் கொண்டுவரலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

அத்துடன் 2017ஆம் ஆண்டு கேரள பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் இணையதள சேவை பயன்படுத்துவதை நாங்கள் அடிப்பட மனித உரிமையாக கொண்டு அனைவருக்கும் இணையதள சேவையை அளிக்க போகிறோம் எனத் தெரிவித்திருந்தார். ஆகவே இணையதள சேவையை பயன்படுத்துவது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 21-ன் கீழ் தனிமனித சுதந்திரத்தில் வருகிறது. அத்துடன் அதேபோல சட்டப்பிரிவு 21ஏ (கல்வி உரிமை) பிரிவின் கீழும் இணையதள சேவை பயன்பாடு வருகிறது” என தீர்ப்பு அளித்தார்.