இந்தியா

தொடரும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பேச்சுவார்த்தை: தீர்வு பிறக்குமா?

தொடரும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பேச்சுவார்த்தை: தீர்வு பிறக்குமா?

webteam

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் நேற்றைய பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படாத நிலையில், இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

கடந்த 12ஆம் தேதி இந்திய வரலாற்றில் இல்லாத வகையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக அவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இந்த விவகாரம் இந்திய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது, பிரச்னை தீர்வு எட்டப்பட்டு விட்டது என இந்திய பார் கவுன்சின் அறிவித்தது. ஆனால் நீதிபதிகள் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

இந்நிலையில் போர்க்கொடி தூக்கிய நீதிபதிகளுடன் நேற்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த கூட்டத்தில் மூத்த நீதிபதியான செல்லமேஸ்வர் கலந்துகொள்ளவில்லை. இந்த விவகாரம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இன்றைய பேச்சுவார்த்தை கூட்டத்தின் போது அவர் பங்கேற்றுள்ளார். இருப்பினும் பேச்சுவார்த்தையில் தீர்வு பிறக்குமா என்ற கேள்வியே எழுந்துள்ளது. ஏனெனில் போர்க்கொடி தூக்கிய நீதிபதிகளின் முக்கிய குற்றச்சாட்டே, வழக்குகளை ஒதுக்கீடு செய்வதில் தலைமை நீதிபதி தன்னிச்சையாக செயல்படுகிறார் என்பது தான். ஆனால் தற்போது தலைமை நீதிபதி அறிவித்துள்ள முக்கிய வழக்குகளை விசாரிக்கும் அரசியல் சாசன அமர்வில் இந்த 4 நீதிபதிகளுக்கும் இடமளிக்கப்படவில்லை. அதில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஏ.எம்.கன்விகார், சந்ராசுத், அசோக் பூஷன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

இந்த அமர்வு தான் ஆதார் வழக்கு, ஒரினச் சேர்க்கை எதிரான சீராய்வு மனு, சபரிமலையில் பெண்களை அனுமதிக்ககோரும் வழக்குகளை விசாரிக்க உள்ளது. இதுமட்டுமின்றி நீதிமன்ற பிரச்னையில் முக்கிய சர்ச்சையாக இருப்பது, நீதிபதி லோயா மரண வழக்கை நீதிபதி அருண் மிஸ்ரா விசாரிப்பதாகும். இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நீதிபதி லோயா மரண வழக்கை மீண்டும் நீதிபதி அருண் மிஸ்ராவே விசாரித்தார். இதன்மூலம் 4 நீதிபதிகளின் கோரிக்கை எதுவும் ஏற்கப்படவில்லை எனத் தெரிகிறது. எனவே இந்த பேச்சுவார்த்தையில் தீர்வு என்பது கேள்விக்குரியாக உள்ளது.