இந்தியா

கடமையைச் செய்யுங்கள் என அரசுக்கு ரிசர்வ் வங்கி சொல்ல வேண்டும்” - ப. சிதம்பரம்

PT

உங்கள் கடமையைச் செய்யுங்கள் என ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்குச் சொல்ல வேண்டும் என்று ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

நேற்றைய தினம் செய்தியாளர்களைச் சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் வங்கிக் கடன் தவணைகளைச் செலுத்த மேலும் மூன்று மாத காலம் அவகாசம் வழங்கப்படுவதாகவும் ரெப்போ ரேட் வட்டி விகிதம் 4.4 சதவீதத்திலிருந்து 4 சதவிகிதமாகக் குறைக்கப்படுவதாகவும் கூறினார்.

கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவில் இந்தியப் பொருளாதாரம் கடுமையாகச் சரிவடைந்துள்ளது என்றும் 2020 -21 ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி சரிவடைய வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.இந்நிலையில் ஆளுநரின் இந்தப் பேச்சுக்கு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவரது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றைப் பதிவு செய்துள்ளார். அதில் அவர், "நாட்டில் நுகர்வுக்கான தேவை சீர்குலைந்துவிட்டது. ஆகவே 2020-21-ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது எதிர்மறையாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் கூறுகிறார்.

பிறகு ஏன் சந்தையில் அதிகமான பணப்புழக்கத்தை உள்ளே செலுத்துகிறார். உங்கள் கடமையைச் செய்யுங்கள், நிதி நடவடிக்கை எடுங்கள் என்று வெளிப்படையாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் மத்திய அரசிடம் அப்பட்டமாகத் தெரிவிக்க வேண்டும்.ரிசர்வ் வங்கி நேற்று அறிக்கை வெளியிட்ட பின்பும், மத்திய அரசோ அல்லது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனோ அதைப்பற்றிப் பேசுவதற்குப் பதிலாக தாங்கள் அறிவித்த ரூ.20லட்சம் கோடி திட்டத்தைப் பற்றித்தான் புகழ்கிறார்கள். அவர்கள் அறிவித்த நிதித் தொகுப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதத்துக்கும் குறைவுதான்.

மத்திய அரசாங்கம் எவ்வாறு பொருளாதாரத்தை எதிர்மறையான வளர்ச்சி பகுதிக்கு இழுத்துச் சென்றது என்று ஆர்.எஸ்.எஸ் வெட்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.